6 இடங்களில் வேன், கார் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


6 இடங்களில் வேன், கார் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2018 4:30 AM IST (Updated: 8 Aug 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படாத நிலையில் வேன், கார் டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர்,

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மோட்டார் தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் 15 சதவீத ஆட்டோ மற்றும் வேன்கள் மட்டுமே ஓடவில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. இதனால் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மத்திய அரசின் மோட்டார் வாகன திட்டத்தின் சட்ட திருத்தத்துக்கு கண்டனம் தெரிவித்து விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 இடங்களில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கார், ஆட்டோ, வேன் டிரைவர்கள் உள்பட 360 பேர் கலந்து கொண்டனர்.

சாத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோதண்டராமன் தலைமை தாங்கினார். புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். உயர்த்தப்பட்டுள்ள இன்சூரன்ஸ் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.ஐ.டி.யூ. சாலை போக்குவரத்து சங்க மாவட்ட குழு உறுப்பினர் திருமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொ.மு.ச. சார்பில் கருப்பையா, ஐ.என். டி.யூ. சி. சார்பில் தங்கமாரி, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தங்கப்பழம், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் பிச்சைக்கனி, தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாராள், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வீர சதானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக் குமார், சி.ஐ.டி.யூ. முன்னாள் மாவட்ட நிர்வாகி சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story