‘யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியலாம்’ நவீன வாக்குப்பதிவு எந்திரங்கள் சிவகங்கை வருகை


‘யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியலாம்’ நவீன வாக்குப்பதிவு எந்திரங்கள் சிவகங்கை வருகை
x
தினத்தந்தி 7 Aug 2018 11:00 PM GMT (Updated: 7 Aug 2018 9:52 PM GMT)

தேர்தலில் வாக்கு போடும் வாக்காளர்கள், தாங்கள் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய பயன்படும் நவீன வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவில் இருந்து சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

சிவகங்கை,

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்களிக்கும் வாக்காளார்கள் தாங்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார்களோ, அந்த சின்னத்தில் தான் வாக்குகள் பதிவாகி உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் புதிதாக வாக்குகள் சரிபார்க்கும் நவீன எந்திரம் பொருத்தப்படவுள்ளது. இந்த எந்திரம் தேர்தலின்போது வாக்குப்பதிவு கட்டுபாடு எந்திரத்துடன் சேர்த்து இணைக்கப்படும். அப்போது நாம் வாக்களித்தவுடன் எந்த சின்னத்தில் அது பதிவாகியுள்ளது என்ற விவரம் திரையில் தெரிந்து, மறையும். இதை வாக்களித்தவர்கள் மட்டுமே பார்த்து உறுதி செய்துகொள்ள முடியும்.

அதற்காக பெங்களூருவில் இருந்து 1,800 எந்திரங்கள் பாதுகாப்பாக லாரிகள் மூலம் சிவகங்கை கொண்டுவரப்பட்டன. பறக்கும் படை தாசில்தார் கந்தசாமி, தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் ஆகியோர் தலைமையில் சென்ற அதிகாரிகள் இதை பாதுகாப்பாக கொண்டு வந்தனர்.

இந்த எந்திரங்கள் அனைத்தும், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட வினியோக அதிகாரி ராமபிரதீபன், சிவகங்கை தாசில்தார் ராஜா, தாலுகா வினியோக அதிகாரி கண்ணன் ஆகியோர் பாதுகாப்பாக அறையில் வைத்தனர். இந்த அறை முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தலின் போது பயன்படுத்த கடந்த மாதம் புதிதாக 3 ஆயிரத்து 310 மின்னணு எந்திரங்களும், 1,800 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story