தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம்: கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 3:46 AM IST (Updated: 8 Aug 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கடலூர்,



தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் மறைவு செய்தி நேற்று மாலை 6.35 மணி அளவில் வெளியானது. இதையடுத்து அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலூர் நகரம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஒரு சில தள்ளுவண்டி கடைகள் மட்டுமே இருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைகளுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பின, இதனால் கடலூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பஸ் கிடைக்காமல் நின்று கொண்டு இருந்தனர்.

பஸ்கள் ஓடாததால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டியவர்கள் ரெயிலில் சென்றனர். இதனால் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் வழக்கத்துக்குமாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடலூரில் ஒரு சில ஆட்டோக்கள் ஓடின. இதனால் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டியவர்கள் ஆட்டோக்களில் ஏறிச்சென்றனர், ஆனால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பஸ்கள் ஓடாததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

விருத்தாசலத்தில் சாலை மறியல்

விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் பஸ்கள் வரவில்லை. இதனால் வெகுநேரம் காத்திருந்த பயணிகள் திடீரென ஜங்ஷன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

இதேபோல் பண்ருட்டி பஸ் நிலையத்திலும் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். உடனே போலீசார், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசி பஸ்களை வரவழைத்து பயணிகளை அனுப்பி வைத்தனர். இதனிடையே பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு அண்ணா சிலை அருகில் முன்னாள் கவுன்சிலர் சிவாவின் ஆதரவாளர்கள், கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைத்தனர். அதே இடத்தில் நகர தி.மு.க. சார்பில் மற்றொரு டிஜிட்டல் பேனர் வைக்க வந்தனர். இதனால் இரு தரப்பினரிடயே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, இரு தரப்பினரும் அதே இடத்தில் அடுத்தடுத்து வைத்துக்கொள்ள அனுமதித்தனர். இதையடுத்து 2 டிஜிட்டல் பேனர்களும் அங்கு அடுத்தடுத்து வைக்கப்பட்டன.

காடாம்புலியூரில் சிலர் பழைய லாரி டயர்களில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அதனை மெயின் ரோட்டில் உருட்டி விட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இதே போல் கருணாநிதி மரணம் அடைந்த தகவல் பரவியதும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக விழுப்புரம் நகரில் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலைகள் வெறிச்சோடின.

மேலும் மாவட்டம் முழுவதும் அரசு பஸ்களின் சேவையும் முற்றிலும் முடங்கியது. அனைத்து அரசு பஸ்களும் இரவு 7 மணிக்கு மேல் இயக்கப்படவில்லை. பஸ்கள் அனைத்தும் அந்தந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கு பாதுகாப்பாக திருப்பி விடப்பட்டன. அதுபோல் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பஸ் கிடைக்காமல் மிகவும் அவதியடைந்தனர். கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களில் பயணிகள் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு 8 மணிக்கு மேல் எந்தவொரு பஸ்களும் இயக்கப்படாததால் பஸ் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட வெகு தொலைவு செல்ல வேண்டிய பயணிகள், ரெயில் மூலம் புறப்பட்டுச்சென்றனர். இதனால் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. செஞ்சி, திருக்கோவிலூர் என மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story