மின்மாற்றியில் சரக்கு வேன் உரசியதால் பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
திருப்பூர் வெங்கமேடு அருகே மின்மாற்றிபியில் சரக்கு வேன் உரசியதில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் சம்பவ இடத்தில் பலியானார். அவருடைய உடலை எடுத்து செல்லவிடாமல் தடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை அடுத்த கிரைமான்பூர் பகுதியை சேர்ந்தவர் பரத் கட்டாரியா (வயது 37). இவர் சரக்கு வேன் ஓட்டி வந்தார். நேற்றுகாலை குமார்நகரில் இருந்து பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு சாய ஆலைக்கு சரக்கு வேனை ஓட்டி சென்றார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திரன் (22) என்பவர் கிளீனராக உடன் சென்றார். அப்போது வெங்கமேடு அருகே சென்ற போது அந்த வேன் சாலையோரம் இருந்த மின்மாற்றியில் உரசியது. இதனால் மின்மாற்றியிலும், வேனிலும் லேசாக தீப்பொறி விழுந்தது. மேலும் மின்மாற்றியில் இருந்து வேனில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வேன் டிரைவர் பரத் கட்டாரியா மற்றும் கிளீனர் ராஜேந்திரன் ஆகியோர் வேனை தொடாமல் கீழே குதித்தனர்.
அப்போது நிலைதடுமாறிய பரத் கட்டாரியா வேனை தொட்டுள்ளார். ஏற்கனவே வேனில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால் வேனை தொட்ட பரத் கட்டாரியா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் நிலையில் வேனுக்கு பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி சிவக்குமார் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வெங்கமேடு போயம்பாளையம் சாலையில் மின்வாரியம் சார்பில் கேபிள் பதிக்கும் பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட குழி மூடப்படாததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 300–க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன், அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் அந்த பகுதியில் மின்வாரியம் சார்பில் கேபிள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருப்பதாகவும், ஏராளமான பள்ளி வாகனங்கள் அந்த வழியாக சென்று வருவதால் பெரிய விபத்து நடக்கும் முன்பு அதை உடனே மூட வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.
மேலும் மின்சாரம் தாக்கி இறந்த பரத் கட்டாரியா உடலை ஆம்புலன்சில் ஏற்றுவதை தடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர். பின்னர் பரத் கட்டாரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.