மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவை தொடர்ந்து திருச்சியில் பஸ்கள் ஓடவில்லை- கடைகள் அடைக்கப்பட்டன + "||" + Buses were not running in Trichy after Karunanidhi's closet - shops were closed

கருணாநிதி மறைவை தொடர்ந்து திருச்சியில் பஸ்கள் ஓடவில்லை- கடைகள் அடைக்கப்பட்டன

கருணாநிதி மறைவை தொடர்ந்து திருச்சியில் பஸ்கள் ஓடவில்லை- கடைகள் அடைக்கப்பட்டன
கருணாநிதி மறைவை தொடர்ந்து திருச்சியில் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் நிலையம் வெறிச்சோடியது.
திருச்சி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி சோகமானது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி மத்திய பஸ் நிலையம் நேற்று இரவு 7 மணி முதல் வெறிச்சோடியது. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர். திருச்சியில் இருந்து பஸ்கள் எதுவும் புறப்படவில்லை என்றாலும் வெளியூர்களில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக ஒரு சில பஸ்கள் வந்தன. அந்த பஸ்களை நோக்கி பயணிகள் ஈசல் போல் ஓடினார்கள். ஆனால் அந்த பஸ்களும் நிற்காமல் சென்று விட்டன.


திருச்சியில் நகை கடைகள், ஜவுளி கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கான நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள பெரிய கடைவீதி மற்றும் என்.எஸ்.பி. சாலையில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் அடைக்கப்பட்டன. திருச்சி ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம் மற்றும் தில்லைநகர், உறையூர், மெயின்கார்டு பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், இரவு நேர டிபன் கடைகள், டீ கடைகள், பெட்டி கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் மக்கள் டீ கூட குடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். தள்ளுவண்டி கடைகளை கூட ஒரு இடத்திலும் காண முடியவில்லை. திருச்சி நகரில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் நேற்று மாலை 6 மணி காட்சிகளும், இரவு 10 மணி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. இதே போல் நகரில் உள்ள பல்வேறு இடங்களிலும் தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்திலே பறந்தன. திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் உள்ள திராவிடர் கழக கொடி கம்பத்தில் தி.க. கொடியும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. திருச்சி நகரில் பல இடங்களிலும் தெருக்களில் தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி படத்தை வைத்து அதற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பிற்காக அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் வெளியூர் செல்ல இருந்த பொதுமக்கள் பலர் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு படையெடுக்க தொடங்கினர். இதன் காரணமாக ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவில்லா டிக்கெட் கவுன்ட்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்று பயணம் செய்தனர். ஊருக்கு செல்ல ரெயில் இல்லாத பயணிகள் பலர் நடைமேடைகளில் தங்கியிருந்ததை காண முடிந்தது. ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு கருதி ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் நடைமேடைகளில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். மத்திய பஸ் நிலையம், ராக்கின்ஸ் ரோடு பகுதிகளில் ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால் ரெயில் நிலையத்தில் உள்ள ஓட்டல்களுக்கு மக்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் ரெயில் நிலைய ஓட்டல்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று (புதன்கிழமை) பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டதால் நேற்று பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் காத்திருந்து பெட்ரோல் போட்டு சென்றனர்.