மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி அண்ணாசாலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்


மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி அண்ணாசாலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் மறியல்
x
தினத்தந்தி 8 Aug 2018 4:57 AM IST (Updated: 8 Aug 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் வாகன சட்ட திருத்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சாலை போக்குவரத்து தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த நடவடிக்கையை கைவிடக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். 12 சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், தொ.மு.ச. பொருளாளர் நடராஜன், மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியபிள்ளை, ஏ.ஐ.டி.யு.சி. பொதுசெயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மறியல் போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசியதாவது:- சாலை போக்குவரத்து தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் என்ற பெயரில் உயர்த்தப்பட்ட காப்பீட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரிக்குள் பெட்ரோலிய பொருட்களையும் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழில்களில் ஈடுபட்டுள்ள 12 சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தி வருகிறோம்.

தற்போது உள்ள மோட்டார் வாகன சட்டத்தில் 71 திருத்தங்களை செய்தும், 18 புதிய பிரிவுகளை சேர்த்தும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. ஆனால் மேலவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக சட்டம் நிறைவேறுவது தாமதப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தால் வாகனங்களின் பதிவு, எப்.சி., ஓட்டுனர் உரிமம் வழங்குவது அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.

அதேபோல் வாகனங்களும் குறிப்பிட்ட காலம் மட்டுமே ஓட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் வரும் நிலை ஏற்படும். இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்களை பாதிக்கும் இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும். இவ்வாறு சங்க நிர்வாகிகள் பேசினார்கள்.

மறியலில் ஈடுபடும் சங்க நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் அதற்கு முன் போலீசார் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட இருப்பதால் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் சென்னை மாநகர் முழுவதும் வழக்கம் போல் இயங்கின.

இதற்கிடையே மறியல் போராட்டம் நடந்த அண்ணாசாலை வழியாக சென்ற ஆட்டோக்களை மறியலில் கலந்து கொண்டவர்கள் கட்டைகளால் தாக்கினார்கள். இதனால் ஒரு சில ஆட்டோக்கள் சேதமடைந்தன. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் மறியல் போராட்டம் நடந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story