மாவட்ட செய்திகள்

361 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை + "||" + National Identity Card for 361 Disabled Persons

361 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

361 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 361 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன.
வேலூர், 


தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைய முகாம்கள் நடத்தி தகுதியானவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசு வழங்கும் 48 வகையான சலுகைகளை பெற முடியும்.

வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமையன்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு அடையாள அட்டை பெற்று வருகின்றனர்.
அதன்படி, இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார். இயன்முறை மருத்துவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அவர்களை கண், காது, எலும்பு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் தன்வீர் அகமது, பாபு, கருணாகரன், செந்தில்குமார், உதயதீபா, ரேகா ஆகியோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர்.

அதில் தகுதியுடைய 361 மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் விண்ணப்பித்த சிலருக்கு மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்துக் கண்டறிவதில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை கண்டறியப்படும். 40 சதவீதத்துக்கு மேல் ஊனத்தின் தன்மை காணப்பட்டால் அவர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறும் சிறப்பு முகாமில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.