திருவண்ணாமலையில் பஸ்கள் ஓடவில்லை; கடைகள் அடைப்பு


திருவண்ணாமலையில் பஸ்கள் ஓடவில்லை; கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 6:02 AM IST (Updated: 8 Aug 2018 6:02 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி மறைவையொட்டி திருவண்ணாமலையில் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டன. வேட்டவலத்தில் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

திருவண்ணாமலை, 



சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை சுமார் 6 மணியளவில் திருவண்ணாமலை நகரில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திறந்து இருந்த கடைகளையும் மூட உத்தரவிட்டனர்.
பெரும்பாலான ஓட்டல்களில் தயார் செய்யப்பட்டு இருந்து உணவு பொருட்களை பரபரப்பாக விற்பனை செய்தனர். மேலும் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பஸ்கள் அந்தந்த டெப்போக்களுக்கும், பஸ்கள் நிறுத்தும் இடத்திற்கும் சென்றன.

இதனால் போளூர், கண்ணமங்கலம், வேலூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு பஸ் இல்லாமல் பயணிகள் காத்திருந்தனர். திருவண்ணாமலையின் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் மக்கள் அங்குள்ள ஆட்டோக்களில் சென்றனர். இந்த சமயத்தை பயன்படுத்தி சில ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது அறிந்து சிலர் முதலில் ஆட்டோக்களில் ஏற மறுத்து பின்னர் வேறு வழியில்லாமல் ஏறி சென்றனர்.


மேலும் திருவண்ணாமலை நகர பகுதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. சில இடங்களில் சிலர் மோட்டார் சைக்கிள்களில் கலைஞர் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
மேலும் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் எதுவும் இல்லாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அது மட்டுமின்றி தி.மு.க. வினர் சார்பில் நகரின் முக்கிய பகுதியில் கருணாநிதியின் பேனர்கள் வைத்து மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.


வேட்டவலம் நகர தி.மு.க. செயலாளர் ப.முருகையன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட கட்சியினர் வேட்டவலம் காந்தி சிலையில் இருந்து கடைவீதி, சின்ன கடைத் தெரு ஆகிய பகுதியில் மவுன ஊர்வலம் சென்றனர். கடைகள் அடைக்கப்பட்டது.
அப்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் அரசு போக்குவரத்து பஸ்சின் முன் கண்ணாடி மீது சிலர் கல்வீசினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story