கூட்டுறவு கடன் சங்க செயலாளருக்கு கத்திக்குத்து
படவேட்டில் கூட்டுறவு கடன் சங்க செயலாளரை கத்தியால் குத்திய ரேஷன் கடை விற்பனையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்ணமங்கலம்,
படவேட்டில் கூட்டுறவு கடன் சங்க செயலாளரை கத்தியால் குத்திய ரேஷன் கடை விற்பனையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கண்ணமங்கலத்தை அடுத்த படவேட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக சகாதேவன் (வயது 52) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் அவர் பணியில் இருந்த போது, அங்கு வந்த வாழியூர் ரேஷன் கடை விற்பனையாளர் கோவிந்தசாமி (54) என்பவர் தனக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்கும்படி கேட்டுள்ளார்.
கோவிந்தசாமி படவேட்டில் உர விற்பனை பிரிவில் இருந்த போது ரூ.2 லட்சம் கடன் மற்றும் சேமிப்பு கணக்கில் ரூ.1½ லட்சம் கையாடல் செய்துள்ளதாகவும் அதனால் கோவிந்தசாமிக்கு சம்பளம் வழங்கக்கூடாது என திருவண்ணாமலை இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். எனவே, உனக்கு சம்பளம் வழங்க முடியாது என்று சகாதேவன் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தசாமி திடீரென கத்தியால் சகாதேவனை குத்தினார். இதனையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த சகாதேவனை அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சந்தவாசல் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.