ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் ... ‘திரையுலகில் கருணாநிதி ஒரு சரித்திரம்’
தமிழ் சினிமா உலகில் சரித்திரமாக விளங்குபவர் கருணாநிதி. அடுக்கு மொழி வசனங்கள், அழுத்தமான கதைகள் மூலம் வெற்றிப் படங்களை கொடுத்தார்.
கருணாநிதி எழுத்தில் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், ‘பழனியப்பன்.’ இது 1944-ம் ஆண்டு திருவாரூர் பேபி டாக்கீஸில் நடத்தப்பட்டது. அப்போது கருணாநிதிக்கு வயது 20.
முதன்முதலில் ‘அபிமன்யு’ படத்துக்கு அன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து வசனம் எழுதி இருந்தார். ஆனால் படத்தில் வசனம் என்று அவர் பெயரைப் போடவில்லை, அதற்காக வருத்தப்படவில்லை. எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’ படத்தில் தான் கருணாநிதியின் பெயர் முதன் முதலாக திரையில் வந்தது. 1947-ம் ஆண்டு இந்த படம் வெளியானது.
1950-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மந்திரிகுமாரி’. குண்டலகேசியின் ஒரு பகுதியை படமாக மாற்றியிருந்தார் கலைஞர். திரைப்பயணத்தை ‘ராஜகுமாரி’ மூலம் 1947-ல் தொடங்கிய கருணாநிதி, 2011-ம் ஆண்டு ‘பொன்னர் சங்கர்’ படம் வரை 64 வருடங்கள் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளிலும் முத்திரைப் பதித்தார். 21 நாடகங்களை எழுதிய கருணாநிதி 69 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
பராசக்தியில் பணத்தையெல்லாம் இழந்த சிவாஜி கணேசன் சாலை ஓரமாய் படுத்துத் தூங்கும்போது ஒரு போலீஸ்காரர் வந்து தட்டி எழுப்புவார்.‘டேய்... நீ பிக்பாக்கெட்டா?’ ‘இல்லை... எம்ட்டி பாக்கெட்“, ஏண்டா... முழிக்கிறே?, ‘தூங்குறவனை எழுப்பினால் முழிக்காம என்ன பண்ணுவான்?...இதுபோல அந்த படம் முழுவதும் ‘பளிச்’ வசனங்கள் இடம் பெற்று இருந்தன.
ஒரு வீட்டின் திண்ணையில் படுத்திருந்த சிவாஜி மீது அந்த வீட்டுக்காரர் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டுவார். அதற்கு சிவாஜி, ‘அப்படியே சோப்பு இருந்தா கொடுங்க. குளிச்சி நாலு நாளாச்சி’ என்பார். ‘ஓடினாள், ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்’. ‘என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்... சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்... அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது’ என பாமரர்கள் ரசிக்கும் வகையில் எழுதினார். ‘கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக் கூடாது’ என்ற வசனமும், ‘அடேய் பூசாரி.. அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள்?’ என்ற கேள்வியும் 66 ஆண்டுகள் கடந்து இப்போதும் உயிரோட்டத்துடன் இருக்கும் வசனங்கள்.
‘மனோகரா’ படம் அதில் ஒரு மைல்கல். “பொறுத்தது போதும்...பொங்கியெழு” என்கிற தாய் கண்ணாம்பாவும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்’ என்கிற மகன் சிவாஜியும் கலைஞரின் வசனத்தில் போட்டி போட்டு நடித்து இருந்தார்கள்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் கோவலனாகவும் விஜயகுமாரி கண்ணகியாகவும் நடித்திருந்த பூம்புகார் படத்தில் வசனங்களால் புதிய புரட்சியையே ஏற்படுத்தினார் கலைஞர். ‘யார் கள்வன் என் கணவன் கள்வனா? அவரை கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர் நல்லான் வகுத்ததா நீதி? இந்த வல்லான் வகுத்ததே நீதி இது கோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை இது கோவலன் தேவியின் சிலம்பு. நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு? என்று தீப்பொறி கிளப்பி இருந்தார்.
‘என்னடா ஆச்சரியக் குறி போடுகிறாய்?’ ‘ஆச்சரியக்குறிதான் ஜமீன்தார் அவர்களே.. கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை’ பண்ணையாருக்கும், தொழிலாளிக்கும் இடையிலான ‘நாம்’ பட வசனம் இது.
மந்திரிகுமாரி தொடங்கி 21 படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். பராசக்தியில் “பூமாலை நீயே.. புழுதி மண்மேலே..., பூம்புகார் படத்தில் வாழ்க்கையெனும் ஓடம்..., மறக்கமுடியுமா? படத்தில் ‘காகித ஓடம்... கடல் அலை மீது’ போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை.
நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் கலைஞரின் பங்கு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. முதல்வராக இருந்த காலகட்டத்திலும் அவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 1980-களில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘பாலைவன ரோஜாக்கள்‘, ‘நீதிக்குத் தண்டனை‘, ‘பாசப்பறவைகள்‘ போன்ற வெற்றிப் படங்களைத் தந்தார். 2011-ம் ஆண்டில் தன் 88-வது வயதில்கூட ‘பொன்னர்சங்கர்‘ என்ற வரலாற்றுப் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதினார். கதை, திரைக்கதை, வசனம் என்று 75 படங்களில் அவரது பங்களிப்பு உள்ளது. மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், கலைஎழில் கம்பைன்ஸ், பூம்புகார் புரொடக்ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் 29 படங்களை தயாரித்துள்ளார்.
கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சித் தொடர், ‘ஸ்ரீ ராமானுஜர்’ மதத்தில் புரட்சி செய்த மகான். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடருக்கு வசனம் எழுதத் தொடங்கியபோது அவரது வயது 92.
Related Tags :
Next Story