நெல்லை சந்திப்பில் ரெயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு போட்ட போலீசார்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர்.
வாகனங்களால் இடையூறு
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக தினமும் பல்வேறு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகளை வழி அனுப்பவும், அழைத்து செல்லவும் மோட்டார் சைக்கிள்களில் வருவோர் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாசல் முன்பு தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் முதியோர், ஊனமுற்றோர் ரெயில் நிலையத்துக்குள் சென்று வர மிகவும் சிரமப்பட்டனர்.
புதிய நடவடிக்கை
இந்த நிலையில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் பணிபுரிந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞான ஆனந்த் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் ரெயில் நிலையம் முன்பு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வித்தியாசமான நடவடிக்கை எடுத்தார்.
அதாவது நேற்று முன்தினம் ரெயில் நிலைய நுழைவு வாசல் பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்ற போர்டுகளை வைத்தார். நேற்று காலையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சந்திப்பு ரெயில் நிலைய நுழைவு வாசல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பூட்டு போட்ட போலீசார்
நுழைவு வாசல் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை, ஓட்டிச்செல்ல முடியாத வகையில் இரும்பு சங்கிலியால் இணைத்து பூட்டு போட்டனர். வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை இரும்பு சங்கிலியால் இணைத்து அதில் பூட்டு போட்டனர்.
ரெயில் நிலையத்துக்கு சென்று விட்டு வெளியே வந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ஒவ்வொரு பயணியாக அழைத்து இனிமேல் ரெயில் நிலைய நுழைவு வாசல் முன்பு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று எச்சரித்தனர். பின்னர் பூட்டை திறந்து சங்கிலியை அகற்றி மோட்டார் சைக்கிள்களை விடுவித்தனர்.
Related Tags :
Next Story