கருணாநிதி மறைவுக்கு அனைத்துக்கட்சியினர் அஞ்சலி


கருணாநிதி மறைவுக்கு அனைத்துக்கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 9 Aug 2018 4:30 AM IST (Updated: 9 Aug 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. உள்பட அனைத்துக்கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை,

முன்னாள் முதல்–அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி, நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதனையொட்டி அவரது மறைவுக்கு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க. மட்டுமின்றி அனைத்துக்கட்சியினரும் மவுன ஊர்வலம் சென்றும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். தொண்டர்கள் சிலர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கையில் நேற்று முன்தினம் கருணாநிதி மரணமடைந்த தகவலை அடுத்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகரில் வணிக கடைகள், மருந்து கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நகரின் முக்கிய வீதிகளில் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

வாரந்தோறும் புதன்கிழமை சிவகங்கையில் வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தை நேற்று நடைபெறவில்லை. இதேபோல் சிவகங்கை நேரு பஜாரில் உள்ள தினசரி காய்கறி மார்கெட்டிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சமத்துவபுரம் பகுதியில் தொண்டர்கள் சிலர் கருணாநிதி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மொட்டை அடித்துக்கொண்டனர். சிவகங்கை கோர்ட்டு வாசலில் இருந்து அனைத்துக்கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல் காரைக்குடியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை. நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. நகரில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்துக்கட்சியினரும் தங்களது கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிட்டிருந்தனர். முன்னதாக அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை வரை அனைத்துக்கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலகத்திற்கு தி.மு.க. தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் மலையரசன் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழகம் சார்பில் மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். கோவிலூரில் கண்ணன் என்ற தொண்டர் மொட்டை அடித்து கொண்டார். இதேபோல் கானாடுகாத்தான், பள்ளத்தூர், புதுவயல், சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மானாமதுரையில் வைகை கீழ்கரை, மேல்கரை, மரக்கடை வீதி என முக்கிய பகுதிகளில் கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டு இருந்தன. நகரை பொறுத்தவரை பஸ்கள், ஆட்டோ, வேன் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் தி.மு.க.வினர் கருணாநிதி மறைவையொட்டி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று திருப்பத்தூர், இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டதுடன், பஸ்கள் ஓடவில்லை. திருப்பத்தூரில் அனைத்துக்கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. மற்ற பகுதிகளில் தி.மு.க.வினர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Next Story