கருணாநிதி மறைவுக்கு மாவட்டம் முழுவதும் அஞ்சலி; மவுன ஊர்வலம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மாவட்டம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள், மவுன ஊர்வலம் நடைபெற்றது.
பனைக்குளம்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது திருஉருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உச்சிப்புளியில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கோவிந்தமூர்த்தி ஏற்பாட்டில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகே உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புதுமடம் விலக்கு சாலை வரை சென்று மீண்டும் பஸ் நிலையத்துக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மீனவர் பிரதிநிதிகள், மண்டபம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் செல்வம், மீன் வியாபாரிகள் சுப்பிரமணி, ராமமூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகி தர்மராஜ், அ.தி.மு.க.வை சேர்ந்த புலவர் சித்திக், கார்மேகம், பா.ஜ.க. நிர்வாகி சக்திநாதன், வர்த்தக சங்க தலைவர் அசரியா மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதேபோல மண்டபம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம் தனது சொந்த ஊரான அழகன்குளத்தில் பகுருல் அமீன், அழகன்குளம் தி.மு.க. ஊராட்சி கழக செயலாளர் ஜமீல் மற்றும் தி.மு.க. தொண்டர்கள், அனைத்து சமுதாய பிரமுகர்களும், பொதுமக்களும் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மண்டபம் பேரூர் பகுதியில் நகர் செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத்ராஜா உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுமடத்தில் தி.மு.க. மண்டபம் ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் காமில் உசேன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரத்தில் சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் செய்யது இபுராகீம், மாவட்ட சிறுபான்மை பிரிவு நிலோபர்கான் மற்றும் நிர்வாகிகளும், வழுதூர் முன்னாள் யூனியன் தலைவர் கலைமதி ராஜா, டாஸ்மாக் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.ராஜா மரியாதை செலுத்தினர். சித்தார்கோட்டையில் தி.மு.க. மூத்த பிரமுகர் வட்டம் அகமது இபுராகீம், முன்னாள் நிர்வாகி அப்துல் கனி மற்றும் கட்சி நிர்வாகிகள், பெருங்குளம் பகுதியில் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.