சி.பி.ஐ. சோதனைக்கு பிறகும் திருச்சி விமான நிலையத்தில் 300 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்


சி.பி.ஐ. சோதனைக்கு பிறகும் திருச்சி விமான நிலையத்தில் 300 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Aug 2018 4:15 AM IST (Updated: 9 Aug 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.ஐ. சோதனைக்கு பிறகும் திருச்சி விமானநிலையத்தில் 300 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாகவும், தங்கம் கடத்தலுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் வந்த தகவலை தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த 5-ந்தேதி விமானத்தில் வந்த பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது உடைமைகளை சோதனையிட்டனர். இந்த சோதனை நேற்று முன்தினம் மாலையில் முடிவடைந்தது. இதில் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர், பயணிகள் 13 பேர் என மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையில் சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.9 லட்சமும், வெளிநாட்டு கரன்சிகள் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.9 லட்சத்து 28 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பயணிகள் கடத்தி வந்த தங்க நகைகள், தங்க கட்டிகள் என 3 கிலோ நகைகள், கணினிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர்-ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பயணி ஒருவர் உள்ளாடையில் மறைத்து 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைக்கு பிறகும் பயணி ஒருவர் கடத்தல் தங்கத்துடன் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story