கருணாநிதி மறைவுக்கு கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடாததால் வெறிச்சோடியது


கருணாநிதி மறைவுக்கு கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடாததால் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 7:50 PM GMT)

கருணாநிதி மறைவையொட்டி கரூர் மாவட்டத்தில் அவரது உருவப்படத்துக்கு பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும், பஸ்கள் ஓடாததாலும் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

கரூர்,

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதைமுன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலும் பொதுமக்கள், கட்சியினர் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் மறைவு கரூரில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. ஏனெனில் கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட குளித்தலை தொகுதியில் தான் 1957-ம் ஆண்டில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் தான் போட்டியிட்ட 12 சட்டபேரவை தேர்தல்களிலும் தோல்வி முகம் காணாமல் சரித்திர சாதனை படைத்தார். இதனால் கருணாநிதியின் மறைவு குறித்து அறிந்ததும் கரூர் மாவட்டம் கண்ணீர் கடலில் மூழ்கியது.

கரூர், திருமாநிலையூர், செங்குந்தபுரம், இனாம்கரூர், கோவை ரோடு, திருக்காம்புலியூர், ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே தெருக்களில் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே கருணாநிதியின் உருவப் படத்திற்கு, 2003-ல் அரசு ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒன்று கூடி, தங்களது வாழ்க்கைக்கு ஒளிவிளக்கேற்றிய கருணாநிதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதே போல் கரூர் அருகே வெங்கமேடு, வாங்கப்பாளையம், காதப்பாறை, வாங்கல், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், பசுபதிபாளையம், செல்லாண்டிபாளையம், சுங்ககேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க. கொடியை அரைகம்பத்தில் பறக்க விட்டு தி.மு.க.வினர் கருணாநிதியின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டித்தனர்.

மேலும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தும் மவுன அஞ்சலி செலுத்தினர். தி.மு.க.வினர் பலரும் கருப்பு சட்டை அணிந்தும், சட்டையில் கருப்பு ரிப்பனை அணிந்தும் துக்கத்தை அனுஷ்டித்தனர். அவர்களுடன் பொதுமக்கள் பலரும் சேர்ந்து சரித்திர நாயகரை இழந்துவிட்டோமே... என நெகிழ்ச்சியுடன் படத்துக்கு பூக்களை தூவி மரியாதை செய்ததையும் காண முடிந்தது. மேலும் தெருக்களில் ஒலிபெருக்கி வைத்து தி.மு.க. பாடல்கள் ஒலிக்கப்பட்டன.

கரூரில் கைத்தறி நெசவாளர்கள், ஆட்டோ, வேன், மினிபஸ் உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள், பல்வேறு அரசியல் அமைப்புகள் உள்ளிட்டவை சார்பிலும் கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கருணாநிதியை போற்றி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நினைவு அஞ்சலி பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன. கரூர் வெங்கமேடு மெயின்ரோட்டில் பல்வேறு தொழிலாளர்கள் சார்பில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர் உழவர் சந்தையில் விவசாயிகள் கருணாநிதி படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கோர்ட்டு உள்ளிட்டவற்றில் அரசு உத்தரவின் பேரில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு கருணாநிதியின் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. கரூரில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் நேற்று முன்தினத்திலிருந்து 7 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கரூரின் பல்வேறு பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் முக்கிய வீதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டன. கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் அரசு பஸ்கள் முழுவதும் நிறுத்தப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ்கள் ஓடாததால் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட இடங்களிலுள்ள பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் திடீரென ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களிலும் போலீசார் ரோந்து சென்று தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே திடீரென ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் கூட்டத்தை கலைக்கும் விதமாக வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

கருணாநிதி மறைவையொட்டி நச்சலூர், நங்கவரம், நெய்தலூர் காலனி ஆகிய பகுதிகளில் கடைகள், தனியார் நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

Next Story