தி.மு.க. தொண்டர்கள் 36 பேர் மாரடைப்பால் சாவு; 5 பேர் தற்கொலை
கருணாநிதி மறைந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் 36 பேர் மாரடைப்பால் இறந்தனர். 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை,
கோவை சிவானந்தாகாலனி ஓஸ்மி நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 49). காவலாளி. இவரது மனைவி சித்ரா என்கிற ராமாத்தாள் (43). இவர் தி.மு.க. தொண்டராக உள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து வீட்டில் அழுது கொண்டு இருந்தார். இதனிடையே நேற்று மாலை கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடர்பான காட்சிகள் டி.வி.யில் ஒளிபரப்பாகின. இதனை சித்ரா மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது சித்ரா உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதபோது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள புறாகிராமம் கீழத்தெருவை சேர்ந்த தி.மு.க. தொண்டர் உலகநாதன் (47) கருணாநிதி இறந்த செய்தியை டி.வி.யில் குடும்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது உலகநாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவடை நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (70). தி.மு.க. பிரமுகரான இவர், நேற்று முன்தினம் இரவு கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை கேட்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). நாதஸ்வர வித்வான். இவரும், மயிலாடுதுறை அருகே மேலபெரம்பூர் கிராமம் உடையார் தெருவை சேர்ந்த கலியமூர்த்தியும் (56) நேற்று முன்தினம் இரவு கருணாநிதி மரணமடைந்த செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தபோது அதிர்ச்சியில் இருவரும் மாரடைப்பில் இறந்தனர்.
மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த நாகராஜ் (70) என்பவரும் கருணாநிதி மரணமடைந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கத்தை சேர்ந்த வரதன் (74), ஆரணி அம்பேத்கர் நகரை சேர்ந்த பெருமாள் மனைவி பாப்பாம்மாள் (57) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (65), விவசாயி. கருணாநிதி இறந்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
திண்டுக்கல் மாநகராட்சி குருநகரை சேர்ந்த பழனிசாமி மனைவி சுப்பம்மாள் (60), வத்தலக்குண்டு விராலிபட்டியை அடுத்த குரும்பட்டியை சேர்ந்த கருப்பையா (55), தேனி மாவட்டம் தேவாரம் மெயின்பஜார் தெருவை சேர்ந்த சுலைமான் (65), போடியை சேர்ந்த கோவிந்தன் (55) ஆகியோர் தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
கருணாநிதி மரணமடைந்த செய்தியை டி.வி.யில் பார்த்து அதிர்ச்சி அடைந்த விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் சின்னநெற்குணத்தை சேர்ந்த கிருஷ்ணன் (65), விழுப்புரம் முத்தோப்பு வார்டு தி.மு.க. பிரதிநிதியான பன்னீர்செல்வம் (59) ஆகிய 2 பேரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. மகளிர் அணி நிர்வாகியான பூவாடு கிராமத்தை சேர்ந்த பெருமா (60), திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் குமரவேல் ஆகியோர் கருணாநிதி மரண செய்தியை டி.வி.யில் பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.
சேலம் தென்அழகாபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (45) நேற்று காலை அழகாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். கருணாநிதியின் படத்திற்கு சீனிவாசன் மலர்தூவி அஞ்சலி செலுத்தியபோது, திடீரென அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந் தார். எடப்பாடி பகுதியை சேர்ந்த லட்சுமணன் (55), பூலாம்பட்டி சந்தை பேட்டை யை சேர்ந்த வெங்கடாசலம் (60), கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கங்கதேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிக்கதாய்ப்பா (80), தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளுபட்டி கொட்டாவூரை சேர்ந்தவர் சண்முகம் (55) ஆகியோர் அதிர்ச்சியில் பலியானார்கள்.
கிளை உறுப்பினர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வடக்கு பொன்னன்விடுதி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. கிளை உறுப்பினர் சின்னையா (65), கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிராமத்தை சேர்ந்த ராமன் (50), திருவரங்குளம் பாரதியார் நகரை சேர்ந்த பழனியம்மாள் (75), திருப்பூர் மாவட்டம் புதுவெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (55) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.
நெல்லை- தூத்துக்குடி
நெல்லை டவுன் வெள்ளம் தாங்கிய பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குருநாதன் என்ற குருசாமி (49). இவர் 44-வது வார்டு தி.மு.க. செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் கருணாநிதி மறைந்தார் என்ற தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த குருசாமி மாரடைப்பால் உயிரிழந்தார்.
பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளத்தை சேர்ந்த சண்முகையா (68), அதே ஊரை சேர்ந்த தி.மு.க. தொண்டரான வேலுசாமி (68), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ஈசுவரி (63) ஆகியோர் கருணாநிதி இறந்த தகவலை டி.வி.யில் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
குமரி மாவட்டம் திக்கணங்கோடு ஊராட்சி 17-வது வார்டு செலாளராக இருந்தவர் அலெக்சாண்டர்(66). இவர் தனது 20 வயதில் இருந்து தி.மு.க.வின் தீவிர தொண்டராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை கேட்டு மனம் உடைந்தார். திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பாக்யா நகரை சேர்ந்தவர் கருப்பையா (69), கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். தி.மு.க. தொண்டரான இவர், நேற்று முன்தினம் இரவு கருணாநிதி மரணம் அடைந்த தகவலை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கருப்பையா நேற்று முன்தினம் இரவு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த முருகேசன் (45) என்பவரும் கருணாநிதி மரணம் குறித்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள திருநிலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் (32). தி.மு.க. உறுப்பினர். நேற்று காலை ராஜ், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்காக அண்ணா சமாதி பின்புறம் இடம் ஒதுக்கி தரவில்லையே என மன வருத்தத்தில் இருந்தார். இதையடுத்து திருநிலை கிராமத்தில் உள்ள ஏரியில் குதித்து ராஜ் தற்கொலை செய்துகொண்டார். கருணாநிதி இறந்த செய்தியை அறிந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. தொண்டர்கள் 31 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை ரிசர்வ் லைன் காலாங்கரையை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 27). வியாபாரி. தி.மு.க. இளைஞரணி உறுப்பினர். கருணாநிதி மரணமடைந்த செய்தியை கேட்டு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி நாகராஜ் (34), தி.மு.க. தலைவர் கருணாநிதி இறப்பு செய்தியை டி.வி.யில் பார்த்து மயங்கி விழுந்து இறந்தார்.
அலங்காநல்லூரை அடுத்த மாணிக்கம்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் சின்னச்சாமி (63). இவர் சின்னஊர்சேரியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்திருந்தபோது டி.வி.யில் கருணாநிதி மறைவு செய்தியை பார்த்துக்கொண்டிருந்தார். அபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
எர்ரம்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் அலங்கார கவுண்டர்(65) துக்கம் தாங்காமல் மாரடைப்பால் இறந்து விட்டார்.
மதுரை பெருங்குடி பர்மா காலனியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கணபதியின் மனைவி சந்திரா (52) கருணாநிதியின் மரணம் அடைந்ததை தொடர்ந்து சோகமாக காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றபோது அதனை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். திடீரென அவர் மாரடைப்பால் இறந்து போனார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள ஏ.வெள்ளோடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது 30). தி.மு.க. தொண்டர். இவர், தற்போது நரசிங்கபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி, தி.மு.க. சார்பில் நரசிங்கபுரத்தில் ‘மைக்செட்‘ கட்டப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. அப்போது இருந்தே அவர் சோகத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் தொலைக்காட்சியில் கருணாநிதியின் இறுதி அஞ்சலி தொடர்பான நிகழ்வுகளை பார்த்துக் கொண்டு இருந்த பாண்டி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரத்தை அடுத்த எலவம்பாளையத்தை சேர்ந்த தி.முக. உறுப்பினர் ராஜா என்ற வெள்ளகுட்டி(வயது 45). கருணாநிதி இறந்ததை அறிந்த ராஜா துக்கம் தாங்காமல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Related Tags :
Next Story