கருணாநிதி மறைவு: தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் அமைதி ஊர்வலம்


கருணாநிதி மறைவு: தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 8 Aug 2018 11:00 PM GMT (Updated: 8 Aug 2018 8:16 PM GMT)

கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க.உள்பட பல்வேறு கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்றனர். பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

ஸ்ரீரங்கம்,

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க. சார்பில் நேற்று ராஜகோபுரம் அருகே கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து அதில் எல்.இ.டி திரை மூலம் சென்னையில் நடந்த இறுதி நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாத்தாரவீதியில் உள்ள பூச்சந்தையில் பூ வியாபாரிகள் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாலை 4.30 மணிக்கு ராஜகோபுரத்தில் இருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலம் 4 கீழஅடையவளஞ்சான் தெருக்கள் வழியாக மீண்டும் ராஜகோபுரத்தை வந்தடைந்தது. பின்னர் அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க முன்னாள் துணை செயலாளர் வீரராகவன் தலைமை வகித்தார். ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவஹர், கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், பாரதீய ஜனதா கட்சி கோவிந்தன், திருவேங்கடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுரேஷ், ம.தி.மு.க துணை செயலாளர் மனோகர், வணிகர் சங்கத்தை சேர்ந்த மாரி, தந்தை பெரியார் திராவிட கழகம் விடுதலையரசு ஆகியோர் பேசினர். அமைதி ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுமட்டுமின்றி சில இடங்களில் கருணாநிதி உருவப் படத்தை வைத்து அமைதி ஊர்வலம் சென்றனர். மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 88 ஊராட்சிகளிலும், துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சியிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

முசிறி கைகாட்டியில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ ரத்தினவேல், நகர செயலாளர் சுப்ரமணியன், தி.மு.க நகரசெயலாளர் சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, ராஜா, தே.மு.தி.க சார்பில் மாவட்ட அவைத்தலைவர் ராஜலிங்கம், காங்கிரஸ் வட்டார தலைவர்் ரவிச்சந்திரன், நகர தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் கலைசெல்வன், திராவிடர் கழகம் ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாளவந்தி, திருத்தலையூர் உள்ளிட்ட கிராமங்களில் கருணாநிதி உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மயானத்தில் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி பொன்மலை ரெயில்வே ஆர்மரி கேட் நுழைவாயில் முன்பு, கருணாநிதி படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதிக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, இறுதி ஊர்வலம், நல்அடக்கம் என அனைத்து நிகழ்ச்சிகளையும் பெரிய அளவிலான எல்.இ.டி திரை வைத்து அனைவரும் பார்க்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

வயலூரில், த.மா.கா. விவசாய அணி சார்பாக அதன் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் உள்ளிட்டோர் கருணாநிதியின் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். சோமரசம்பேட்டையில் வணிகர்கள் சங்கத்தின் சார்பாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி உருவப்படத்தை அலங்கரித்து வைத்து தி.மு.க.வினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். திருச்சி மலைக்கோட்டை பகுதி தி.மு.க. சார்பில் இ.பி.ரோட்டில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளரான தேவதானத்தை சேர்ந்த ரவி, தி.மு.க. தொண்டர்கள் சங்கர், சவுந்தரராஜன் ஆகியோர் மொட்டையடித்து கொண்டனர். 

Next Story