19 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி, கலெக்டர் தகவல்
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள 19 ஆயிரத்து 94 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
விருதுநகர்,
கலெக்டர் (பொறுப்பு) உதயகுமார் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, உடலுழைப்பு தொழிலாளர்களான கட்டுமானம், பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், தையல், சலவை, பொற்கொல்லர், மண்பாண்டம், விசைத்தறி, சமையல், தெரு வியாபாரம், ஆட்டோ உள்பட 113–க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து வரும் தொழிலாளர்களை தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் மற்றும் இதர 16 நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளது.
உறுப்பினர்களாக சேருவோருக்கு வாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 8 ஆயிரம் வரையும், திருமண உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500–ம், ஓய்வூதியம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதமும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு ரூ.25ஆயிரம் வீதமும் மற்றும் விபத்து மரணத்திற்கு ரூ.1 லட்சத்து 2ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.5 லட்சம் வரையும் மற்றும் விபத்து ஊனத்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வாரியங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 94 உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடிவரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 13,337 மாணவ– மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 76 லட்சமும், திருமண உதவித்தொகையாக 197 பேருக்கு ரூ.7 லட்சத்து 6 ஆயிரமும், மகப்பேறு உதவித்தொகையாக 21 பேருக்கு ரூ.63 ஆயிரமும், இயற்கை மரணம் நிதியுதவியாக 219 பேரின் குடும்பத்துக்கு ரூ.37லட்சத்து 23 ஆயிரமும், மின்னணு மணியார்டர் மூலம் 5,320 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளாக ரூ.2 கோடியே 72 லட்சமும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்.