படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் ராமன் தகவல்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு  சுயதொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2018 10:00 PM GMT (Updated: 8 Aug 2018 8:28 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர், 


இது தொடர்பாக கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டு (நீட்ஸ்) திட்டத்தின்’ கீழ் கடனுதவி பெற்று சுயதொழில் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் செய்ய விரும்புபவர்கள் கடன்பெற கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சுயதொழில் தொடங்குபவர்கள் கடன்பெறுவதற்கான திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை இருக்கலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். கடனுதவி பெற தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சென்னை தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம் மூலம் 15 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க 49 வகையான திட்டங்களுக்கு ரூ.4 கோடியே 90 லட்சம் மானியம் வழங்க திட்ட குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடைய சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்து 5 நாட்களுக்குள் தங்கள் விண்ணப்பம், இணைப்புகள் ஆகியவற்றின் நகல்களை பொதுமேலாளர் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூர் ரோடு, காட்பாடி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story