தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணத்தையொட்டி நாகையில் கடைகள் அடைப்பு


தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணத்தையொட்டி நாகையில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 11:00 PM GMT (Updated: 8 Aug 2018 8:36 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணத்தையொட்டி நாகையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஊர்வலமாக சென்று புதிய பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாகப்பட்டினம்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணமடைந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் சரிவர இயக்கப்படவில்லை. அதன் ஒரு பகுதியாக நாகையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் நாகை புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

இந்தநிலையில் தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சியினர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் உருவப் படத்தை ஒரு வாகனத்தில் வைத்து நாகை பழைய பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த ஊர்வலம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், நீலா மேற்கு வீதி, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக சென்றது. பின்னர் புதிய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதில் தி.மு.க. நகர அவை தலைவர் வீராச்சாமி, நகர துணை செயலாளர் சிவா, நகர பொறுப்பாளர் அபுபக்கர், மகளிர் அணி நகர அமைப்பாளர் கருப்பாயி, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் சந்திரமோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகைமாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவழகன் உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூடுதல் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், குலோத்துங்கன் தலைமையில் போலீசார் பேரணி செல்லும் பாதைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் நாகூர், பட்டினச்சேரி, அமிர்தாநகர் மீனவ கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.

கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கீழ்வேளூரில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தலைமையில் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கீழ்வேளூர் சந்தை தோப்பு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் அமிர்தராஜா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். ஆந்தகுடி சிகார் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் வைர. சிவக்குமார் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க.சார்பில் கீழ்வேளூர், சிக்கல், வலிவலம், தேவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Next Story