கருணாநிதி மறைவு: நாதஸ்வர வித்வான் உள்பட 5 பேர் அதிர்ச்சியில் சாவு


கருணாநிதி மறைவு: நாதஸ்வர வித்வான் உள்பட 5 பேர் அதிர்ச்சியில் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2018 10:15 PM GMT (Updated: 8 Aug 2018 8:39 PM GMT)

கருணாநிதி மறைவையொட்டி நாதஸ்வர வித்வான் உள்பட 5 பேர் அதிர்ச்சியில் இறந்தனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள புறாகிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன்(வயது 47). தி.மு.க. தொண்டரான இவர்நேற்று முன்தினம் இரவு தி.மு.க. தலைவர் கருணாநிதி இறந்த செய்தியை டி.வி.யில் குடும்பத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது உலகநாதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே குடும்பத்தினர் அவரை திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு உலகநாதனை பரிசோதனை செய்த டாக்டர்கள், உலகநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு சிவமேரி(42) என்ற மனைவியும், சிவரஞ்சனி, மஞ்சுளா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவடை நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(70). தி.மு.க. பிரமுகரான இவர், நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை டி.வி.யில் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயங்கி கீழே விழுந்த சுப்பிரமணியன் வீட்டிலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு பூசம்மாள் என்ற மனைவியும், மகன் மற்றும் மகளும் உள்ளனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). நாதஸ்வர வித்வான். இவரும், மயிலாடுதுறை அருகே மேலபெரம்பூர் கிராமம் உடையார் தெருவை சேர்ந்த கலியமூர்த்தியும்(56) நேற்று முன்தினம் இரவு கருணாநிதி மரணமடைந்த செய்தியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அதிர்ச்சியில் இருவரும் மாரடைப்பில் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், இறந்த சுப்பிரமணியன், ராஜேந்திரன், கலியமூர்த்தி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த நாகராஜ்(70) என்பவரும் கருணாநிதி மரணமடைந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

கருணாநிதி இறந்த துக்கம் தாங்க முடியாமல் நாகை மாவட்டத்தில் தி.மு.க. தொண்டர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தி.மு.க.வினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story