கருணாநிதி மறைவு: வீணை தொழிலாளர்கள் மவுன ஊர்வலம்


கருணாநிதி மறைவு: வீணை தொழிலாளர்கள் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Aug 2018 4:15 AM IST (Updated: 9 Aug 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீணை தொழிலாளர்கள் மவுன ஊர்வலம் நடத்தினர். ரஜினி மக்கள் மன்றத்தினர் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர்,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி அவருடைய உடல்அடக்கம் நேற்று நடந்தது. இதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சை வீணை தொழிலாளர்கள் குடிசை தொழில் நல முன்னேற்ற சங்கத்தினர், சிவகங்கை பூங்காவில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊர்வலம் மேலவீதி, தெற்கு வீதி, கீழராஜவீதி, பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை வழியாக பனகல் கட்டிடத்தை அடைந்தது. அங்கு இரங்கல் கூட்டம் நடத்தினர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரும் மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் தலைமையில் தெற்கு வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணாசிலை அருகே வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் துணை செயலாளர்கள் வெங்கடேஷ், கல்யாணகுமார், மகளிரணி செயலாளர் அமுதா, இளைஞரணி செயலாளர் ரோகித், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆனந்தகுமார், விவசாய அணி செயலாளர் கண்ணையன், வக்கீல் செல்வராஜ், தஞ்சை ஒன்றியம் வெற்றிமாறன், செல்வின், பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

தஞ்சை போட்டோ வீடியோ கலைஞர்கள் நல சங்கத்தினர் மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமையில் தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் நகர தலைவர் சுகுமாறன், செயலாளர் ஆனந்த், இணை செயலாளர் செந்தில், துணைத்தலைவர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு இந்திய தேசிய ராணுவ பேரவை வாரிசமைப்பினர் மாநில தலைவர் வேல்சாமி தலைமையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

Next Story