கருணாநிதி மறைவுக்கு இரங்கல்: தஞ்சையில் மவுன ஊர்வலம் பல்வேறு கட்சியினர் பங்கேற்பு


கருணாநிதி மறைவுக்கு இரங்கல்: தஞ்சையில் மவுன ஊர்வலம் பல்வேறு கட்சியினர் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 10:45 PM GMT (Updated: 8 Aug 2018 8:55 PM GMT)

கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தஞ்சையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி தி.மு.க. தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர். தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே கருணாநிதி படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

மேலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி ஊர்வலம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே இருந்து தொடங்கியது. முன்னதாக காலை 8 மணி முதலே ரெயில் நிலையம் பகுதியில் தி.மு.க.வினர் வந்து குவியத்தொடங்கினர்.

10 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சரும், வர்த்தக பிரிவு தலைவருமான உபயதுல்லா, தமிழ்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், வக்கீல் தஞ்சை ராமமூர்த்தி, தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.வரதராஜன், மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, தி.மு.க. நகர துணை செயலாளர் நீலகண்டன் மற்றும் தி.மு.க.வினர், காங்கிரஸ் கட்சியினர், கம்யூனிஸ்டு கட்சியினர், தி.க.வினர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், மனித நேய மக்கள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், வணிகர்கள், தொழிற்சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி காந்திஜிசாலை, இர்வின் பாலம் வழியாக அண்ணா சிலையை சென்றடைந்தது. அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அங்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினர்.

வணிகர் சங்க பேரவை சார்பில் தஞ்சையில் கருணாநிதியின் உருப்படத்திற்கு நகர தலைவர் வாசுதேவன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் அவைத்தலைவர் ஜெயபால், மாநில துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, ரவி, நிர்வாகிகள் நசீர், ஆத்மநாபன், நகர செயலாளர் ராஜா, பொருளாளர் கந்தமுருகன், ஆலோசகர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை காமராஜர் மார்க்கெட் காய்கறி வர்த்தக சங்கம் சார்பில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு தலைவர் தர்மராஜ் தலைமையில் செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலையில் வியாபாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் நிர்வாகிகள் வடிவேல், அய்யாத்துரை, ஜெயக்குமார், அன்வர், நடராஜன், எஸ்.கே.சிதம்பரம் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் வியாபாரிகள் அனைவரும் காமராஜர் மார்க்கெட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கீழராஜவீதி, பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை, காந்திஜிசாலை, இர்வீன்பாலம் வழியாக ரெயிலடி வந்தடைந்து அங்கு நடைபெற்ற மவுன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி திருவையாறில் மவுன ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு தி.மு.க. ஒன்றிய அவை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் மதியழகன், தி.மு.க. பேச்சாளர் ஆண்டவர் செல்வம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், சுகுணா, சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் பூதலூரில் தி.மு.க. நிர்வாகி கலியமூர்த்தி தலைமையிலும், திருக்காட்டுப்பள்ளியில் நகர தி.மு.க. அவைத்தலைவர் சரவணன் தலைமையிலும், செங்கிப்பட்டியில் தி.மு.க. பிரமுகர் சரவணன் தலைமையிலும் மவுன ஊர்வலம் நடந்தது. 

Next Story