சாதிச்சான்றுகளின் உண்மை தன்மையை விசாரிக்கும் போலீசார்


சாதிச்சான்றுகளின் உண்மை தன்மையை விசாரிக்கும் போலீசார்
x
தினத்தந்தி 9 Aug 2018 3:15 AM IST (Updated: 9 Aug 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியினர் எனக்கூறி வேலையில் சேர்ந்த 53 பேரின் சாதிச்சான்றுகளின் உண்மை தன்மை யை அறிய 3 தலைமுறை ஆவணங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல், 


மத்திய, மாநில அரசு பணிகளில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது அந்த சமுதாய மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனால், சிலர் போலியாக பழங்குடியினர் என சான்றிதழ் பெற்று வேலையில் சேர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பழங்குடியினர் எனக்கூறி வேலைவாய்ப்பு பெற்றவர்களின் சாதிச்சான்றின் உண்மை தன்மையை அறிய அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களை கொண்டு சமூக நீதி மற்றும் மனிதஉரிமை பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 53 பேரின், பழங்குடியினர் சாதிச்சான்றுகளின் உண்மை தன்மையை கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

இதற்காக சம்பந்தப்பட்ட நபர், அவருடைய தந்தை, தாத்தா என 3 தலைமுறைகளை சேர்ந்தவர்களின் ஆவணங்களை போலீசார் பெற்று வருகின்றனர். இதில் சாதிச்சான்று மட்டுமின்றி, பள்ளி மாற்று சான்று, சொத்து பத்திரங்கள் முதலான விவரங்களை சேகரிக்கின்றனர். அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள மூதாதையரின் சாதியின் பெயரும், சம்பந்தப்பட்ட நபரின் சாதியும் ஒன்றாக இருக்கிறதா? என ஆய்வு செய்கின்றனர்.

மேலும் பழங்குடியினருக்கு என தனியாக குலதெய்வ வழிபாடு இருக்கும். எனவே, குறிப்பிட்ட நபர்கள் வணங்கும் குலதெய்வம், குடும்பத்தினர், மூதாதையர் வழிபட்ட குலதெய்வம் ஆகியவற்றையும் போலீசார் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

இதில் ஒரு சிலருடைய சாதிச்சான்று தொடர்பாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த சாதிச்சான்றுக்கு உரிய நபரின் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை போலீசார் சேகரிக்க தொடங்கி உள்ளனர். 

Next Story