குடகு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


குடகு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 9 Aug 2018 4:30 AM IST (Updated: 9 Aug 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

குடகு,

கர்நாடகத்தில் மே மாதம் இறுதியில் பருவமழை ஆரம்பித்தது. பருவமழையின் முதல் நாளிலேயே தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மங்களூரு உள்பட சில முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன.

இதேப்போல பெங்களூரு நகர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக மலைநாடுகள் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. குடகு மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

மேலும் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. கனமழையால் பாகமண்டலா-ஐயங்கேரி தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் அந்த விரிசல் சரிசெய்யப்பட்டு அந்த வழியாக தற்போது சிறிய ரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. மேலும் குடகு மாவட்டத்தில் மழையின் தாக்கமும் குறைந்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் திடீரென குடகு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. நேற்று காலை வரை விடாமல் மழை பெய்தது. மடிகேரி, பாகமண்டலா, தலைக்காவிரி, குசால்நகர், சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை உள்பட அனைத்து பகுதிகளிலும் கனமழை கொட்டியது.

கனமழையால் பல இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. மேலும் பாகமண்டலா-ஐயங்கேரி நெடுஞ்சாலையில் மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த நிலையில் நேற்று பாகமண்டலா பகுதியில் ஓடும் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் வழியாக ஒரு தனியார் பஸ் சென்று கொண்டு இருந்தது.

நடுவழியில் சென்ற போது ஆற்றின் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் பஸ்சை டிரைவரால் அங்கிருந்து இயக்க முடியவில்லை. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படைவீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் சென்று பஸ்சில் சிக்கி கொண்டவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். குடகு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

Next Story