மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை
கருணாநிதி மறைவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளித்தன.
திண்டுக்கல்,
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அவருடைய மறைவையொட்டி நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
மேலும் மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மளிகை கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட அனைத்து வகையான வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
இதுதவிர வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்களை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு முதலே இயங்கவில்லை. அரசு பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. நேற்றும் 2-வது நாளாக பஸ்கள் அனைத்தும் ஓடவில்லை. மேலும் பஸ் நிலையங்களில் இருந்த கடைகளும் திறக்கப்படவில்லை.
இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அனைத்து பஸ் நிலையங்களும் காலி மைதானம் போன்று காட்சி அளித்தது. இதுதவிர வேன்கள், கார்கள், ஆட்டோக்கள், லாரிகள் மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள என எந்த வாகனமும் நேற்று ஓடவில்லை. திண்டுக்கல் காந்திமார்க்கெட், பூமார்க்கெட் செயல்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
பழனியில், மருந்தகங்கள், மருத்துவமனைகள், ஒரு சில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் சுற்றுலா வாகனங் கள் என எதுவும் நேற்று இயக்கப்படவில்லை. இதனால் நகரின் முக்கிய வீதிகள், பழனி பஸ் நிலையம் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. ஒட்டன்சத்திரம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய நிலையில் காட்சி அளித்தது.
கொடைக்கானல் நகரில் ஏரிச்சாலை, பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சுற்றுலா இடங்கள் மூடப்பட்டதுடன், நட்சத்திர ஏரியில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்குள்ளே முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலையில் பலத்த காற்றும், சாரல் மழையும் பெய்தது. பகல் நேரத்தில் குளிர் நிலவியது.
நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, கொசவப்பட்டி, செந்துறை, நிலக்கோட்டை, கன்னிவாடி, வடமதுரை, பெரும்பாறை மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் வாகனங் கள் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. வேடசந்தூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அனைத்து கடைகளும் மூடபட்டிருந்தன.
Related Tags :
Next Story