கருணாநிதி மரணம்: கடைகள் அடைப்பு- பஸ்கள் ஓடவில்லை சாலைகள் வெறிச்சோடின


கருணாநிதி மரணம்: கடைகள் அடைப்பு- பஸ்கள் ஓடவில்லை சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 9 Aug 2018 4:15 AM IST (Updated: 9 Aug 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி மரணமடைந்ததை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.

தர்மபுரி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று முன்தினம் மாலை உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. மாவட்டத்தில் உள்ள 18 சினிமா தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டன.

தர்மபுரி நகரில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் இயக்கப்படாததால் தர்மபுரி புறநகர் பஸ்நிலையம், டவுன் பஸ்நிலையம் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் நகரின் முக்கிய சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்தது.

தர்மபுரி நகரின் மிக முக்கிய போக்குவரத்து மையமான 4-ரோடு பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து குறைந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்ட தர்மபுரி புறநகர் பஸ்நிலையத்தில் சிறுவர்-சிறுமிகள் பந்துகளை வைத்து விளையாடினார்கள்.

தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இதனால் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய நகரங்களான அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

Next Story