ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்


ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 8 Aug 2018 10:18 PM GMT (Updated: 8 Aug 2018 10:18 PM GMT)

சேலத்தில் நடைபெறும் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம்,



சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 22-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில் சோல்ஜர் டெக்னிக்கல், டெக்னிக்கல் கம்யூனிசன், நர்சிங் உதவியாளர், எழுத்தர், டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் சேலம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள மொத்தம் 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் மிக சிறப்பாக நடைபெற அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு இயக்குனர் கர்னல் ரானே, சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story