துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.3 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி


துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.3 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி
x
தினத்தந்தி 8 Aug 2018 10:29 PM GMT (Updated: 8 Aug 2018 10:29 PM GMT)

எருமாபாளையத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 3 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார்.

சேலம், 


சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட எருமாபாளையத்தில் 2016-2017-ம் ஆண்டு உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் அரசு மானியமாக ரூ.2 கோடியே 40 லட்சம், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.60 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு 36 எண்ணிக்கையிலான குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த குடியிருப்புகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்படுகிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கட்டுமான பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்து, துப்புரவு பணியாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக அம்மாபேட்டை மண்டலத்தில் எல்லீஸ் கார்டன் பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.59 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பசுமை வெளி பூங்கா பணிகள், எருமாபாளையம் மெயின் ரோடு சுந்தரர் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடத்தில் இருந்து மனித கழிவுகள் மூலம் எரிவாயு தயாரிக்கும் மையத்தின் கட்டுமான பணிகளையும் ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்தார்.

இதேபோல் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மணியனூரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பசுமை வெளி பூங்கா அமைக்கும் பணிகளையும் ஆணையாளர் பார்வையிட்டு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story