கருணாநிதி மரணம்: சேலத்தில் தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்
கருணாநிதி மறைவையொட்டி சேலத்தில் தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினார்கள்.
சேலம்,
தி.மு.க.தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்ததை தொடர்ந்து தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தி.மு.க.தலைவர் கருணாநிதியின் உருவப்படங்களை அலங்கரித்து வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி சித்தனூர் பஸ் நிறுத்தம் அருகே கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட பிரதிநிதி விஜயன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சித்தனூர் ஊராட்சி செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் சங்கரன், முத்து, கந்தசாமி, சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் சித்தனூரில் இருந்து புதுரோடு வரை மவுன ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் சிலர் கருணாநிதியின் உருவ முகமூடியை அணிந்தவாறு சென்றதை காண முடிந்தது.
இதேபோல், சேலம் மெய்யனூர் பகுதி தி.மு.க.சார்பில் பகுதி செயலாளர் சர்க்கரை சரவணன் தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து சூரமங்கலம் உழவர் சந்தை வரை மவுன ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டைகளை அணிந்திருந்தனர். பின்னர், அவர்கள் சூரமங்கலம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுதனர். முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த காலத்தில், அவர் செய்த திட்டங்களை பற்றியும், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக செய்த உதவிகளை நினைவு கூர்ந்து அவரது புகழ் வாழ்க..! என்று கோஷம் எழுப்பினர்.
சேலம் மாநகராட்சி 4-வது வார்டு தி.மு.க.சார்பில் அழகாபுரம் பகுதியில் மாநகர முன்னாள் துணை செயலாளர் அழகாபுரம் முரளி தலைமையில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தி.மு.க.வினர் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க கருணாநிதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இதுதவிர, கருணாநிதி படத்திற்கு முன்பு ஏராளமான பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுதனர். கிச்சிப்பாளையம் பகுதியில் தி.மு.க. மாநகர துணை செயலாளர் பழக்கடை கணேசன் தலைமையில் ஏராளமானோர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 12-வது வார்டு தி.மு.க.சார்பில் மணக்காடு, ஜான்சன்பேட்டை பகுதியில் கருணாநிதி உருப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் பால்மார்க்கெட் பகுதியில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில துணை செயலாளர் சியாமளநாதன், இணை செயலாளர் திருமுருகன், மாவட்ட செயலாளர் வர்கீஸ், பொருளாளர் சந்திரதாசன், மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, பள்ளப்பட்டி, பெரமனூர், சாமிநாதபுரம், குமாரசாமிப்பட்டி, குகை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கருணாநிதி உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story