பாகூர், வில்லியனூர், திருக்கனூர் பகுதிகளில் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி 2–வது நாளாக கடைகள் அடைப்பு


பாகூர், வில்லியனூர், திருக்கனூர் பகுதிகளில் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி 2–வது நாளாக கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 9 Aug 2018 4:23 AM IST (Updated: 9 Aug 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

பாகூர், வில்லியனூர், திருக்கனூர் பகுதிகளில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று 2–வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பாகூர்,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணமடைந்ததையடுத்து புதுவை நகரப்பகுதி மற்றும் பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை ஆகிய பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுவை மாநிலத்தில் நேற்று ஒருநாள் அரசு விடுமுறை விடப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படவில்லை. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் 2–வது நாளாக நேற்றும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோ, வேன் மற்றும் சரக்கு வாகனங்களும் இயங்கவில்லை. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் பூத்துகள், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. எந்த பகுதியிலும் சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட நடைபெறவில்லை.

ஏம்பலத்தில் தி.மு.க. தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தி.மு.க., காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில், பாகூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

நெட்டப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர், பத்துக்கண்ணு, மடுகரை, அரியாங்குப்பம், காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


Next Story