கருணாநிதி மறைவு: புதுவை தலைவர்கள் இரங்கல்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு புதுவை மாநில தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசியல் அரங்கில் விடிவெள்ளியாக விளங்கியவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசியலில் அதிகமான பிரதமர்களை சந்தித்து நட்பு பாராட்டி, அவர்களின் நன் மதிப்பை பெற்றவர். இந்திய அரசியலில் தொடர்ந்து பலமுறை ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக திகழந்த முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுக்குள் ஒருவர் கருணாநிதி.
பகுத்தறிவு கொள்கைகளிலும், சமூகப்பணியிலும் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதல்–அமைச்சராக அவரை செயல்பட வைத்தது. தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்கினார்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
80 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட, இந்திய அரசியலில் அசைக்க முடியாத தலைவராக செயல்பட்டவர் கருணாநிதி. சுதந்திர தினத்தன்று முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் நடைமுறையை கொண்டு வந்தார். தமிழக மக்களின் நலன் காக்கும் எண்ணற்ற சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து செயல்படுத்தினர். 1969, 1996 ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. கூட்டணி புதுச்சேரியில் அமைவதற்கு பெரும்பங்கு ஆற்றியவர். கலைஞரின் மறைவு தமிழகத்துக்கும், உழைப்பாளி மக்களுக்கும் பேரிழப்பாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுவை மாநில முஸ்லிம் லீக் (சி.ஏ.) கட்சியின் மாநில தலைவர் முகமது ஷரிப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘இந்திய நாட்டின் அரசியல் அரங்கில் விடிவெள்ளியாக விளங்கிய கருணாநிதியின் மறைவு இந்திய அரசியலுக்கு பெரும் இழப்பாகும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
புதிய நீதிக்கட்சியின் மாநில தலைவர் எஸ்.பொன்னுரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வாழ்ந்து 50 ஆண்டுகால அரசியலில் சமூக நீதிக்காகவும், பெண் உரிமைக்காகவும் சமநிலை சமுதாயம் அமையவும் பாடுபட்டவர் கலைஞர். இந்தியாவின் தலைச்சிறந்த தலைவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் வரிசையில் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் கலைஞர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.
பாரதிதாசன் அறக்கட்டளை நிர்வாகிகள் கோ.பாரதி, கோ.செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘1942–ம் ஆண்டு மாணவர் மன்றத்திற்கு பாரதிதாசனாரிடம் வாழ்த்து கவிதை பெற்று தமது அன்பை வளர்த்த கலைஞர், 1991–ம் ஆண்டு பாரதிதாசனாரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்கினார். தமிழ் வளர்த்த தாயுள்ளம், சமூக நீதி, மகளிர் மேம்பாட்டுக்கு பாடுபட்ட, ஆளுமையின் இமயம் கலைஞரின் இழப்பை எண்ணி கண்ணீர் உருக்குகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.