கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்
கரும்பு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் சையத்மெகமூத், சுந்தர்ராஜன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ், மண்டல துணை தாசில்தார்கள் பாண்டியன், கோவர்த்தனன், வெங்கடசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் வெங்கடபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய 3 தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் உடனுக்குடன் வழங்காமல் பல மாதங்களாக கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். அவற்றை உடனே பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடிப்பட்டத்திற்கான காய்கறி விதைகளை விவசாயிகளுக்கு போதுமான அளவில் தோட்டக்கலைத்துறையினர் வழங்க வேண்டும்.
மேலும் பயிர் காப்பீட்டு தொகையும் உடனே விவசாயிகளுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏரி, நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமந்தபுரம்- அன்னியூர் செல்லும் சாலையின் இருபுறமும் முள்வேலிகள் அதிகமாக உள்ளதை அகற்ற வேண்டும். தென்பேர்- விக்கிரவாண்டி இடையே பொதுமக்கள், மாணவ- மாணவிகளின் வசதிக்காக அரசு டவுன் பஸ் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். இவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கோட்டாட்சியர் உறுதியளித்தார். இக்கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story