தேர்தலில் போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்த சிவசேனா கவுன்சிலர் தகுதி நீக்கம், மேயர் அறிவிப்பு


தேர்தலில் போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்த சிவசேனா கவுன்சிலர் தகுதி நீக்கம், மேயர் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 11:30 PM GMT (Updated: 8 Aug 2018 11:29 PM GMT)

தேர்தலில் போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்த சிவசேனா கவுன்சிலர் சகுன் நாயக் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மேயர் அறிவித்தார்.

மும்பை,

மும்பை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலின் போது, சாந்தாகுருசில் உள்ள 91-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர் சிவசேனாவை சேர்ந்த சகுன் நாயக். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரபிக் சேக் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் ரபிக் சேக், கொங்கன் மண்டல கமிஷனின் சாதி கண்காணிப்பு குழுவில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில் தேர்தலின் போது சகுன் நாயக் போலி சாதி சான்றிதழ் சமர்ப்பித்ததாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இதையடுத்து சாதி கண்காணிப்பு குழு அவரை அசல் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. ஆனால் சகுன் நாயக் தனது அசல் சாதி சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை. இதனால் கொங்கன் மண்டல கமிஷன் அவரை கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதை மும்பை மாநகராட்சி பொதுக்கூட்டத்தில் மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர் அறிவித்தார். சகுன் நாயக்கின் தகுதி நீக்கம் மூலம் மாநகராட்சியில் 94 ஆக இருந்த சிவசேனாவின் பலம் 93 ஆக குறைந்து உள்ளது.

Next Story