தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்,
கருணாநிதி மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், திண்டுக்கல் நகரில் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது. தி.மு.க.வினர் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருக்கமான வாசகங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
தி.மு.க. அலுவலகம் மட்டுமின்றி நாகல்நகர், போடிநாயக்கன்பட்டி, அய்யன்குளம், பழனி சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகில் இருந்து மவுன ஊர்வலமாக சென்றனர். திண்டுக்கல் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பிலும், மாவட்ட பூ கமிஷன் மண்டி வர்த்தகர்கள் சங்கம் சார்பிலும் கருணாநிதி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பழனியில் அடிவாரம், பஸ்நிலையம் பகுதியில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதே போல் சத்திரப்பட்டி, நெய்க்காரப்பட்டி மற்றும் கீரனூர் பகுதியிலும் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். ஒரு சில இடங்களில் பெண்கள் ஒப்பாரி வைத்து தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.
கொடைக்கானலில் அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மவுன ஊர்வலம் கே.ஆர்.ஆர். கலையரங்கத்தில் இருந்து புறப்பட்டு மூஞ்சிக்கல்லை வந்தடைந்தது. அங்கு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நடந்தது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் காமாட்சிபுரம் ஊராட்சி கே.எல்லைப்பட்டியில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி எல்லை ராமகிருஷ்ணன், ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் கோபி, கிளை செயலாளர் வைரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உருவப்படத்துக்கு அஞ்சலி
வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு தி.மு.க. வினர் அஞ்சலி செலுத்தி மவுன ஊர்வலம் சென்றனர்.
வேடசந்தூரில் தி.மு.க. மற்றும் அனைத்து வர்த்தகர் சங்கத்தினர், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மவுன ஊர்வலமாக வந்து ஆத்துமேட்டில் வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
நிலக்கோட்டை, நத்தம்
நிலக்கோட்டையில், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பாரதீய பார்வார்டு பிளாக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் விவசாயிகள் மவுன ஊர்வலமாக சென்றனர். நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நால்ரோடு, மெயின்பஜார், மாரியம்மன்கோவில் உள்ளிட்ட நிலக்கோட்டையின் முக்கிய தெருக் கள் வழியாக சென்றது.
நத்தம் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சாணார்பட்டி, கோபால்பட்டி, கொசவபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் மவுன ஊர்வலமாக சென்றனர்.
தாடிக்கொம்பு பேரூர் தி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தாடிக்கொம்பு சந்தைபேட்டையில் நடந்தது. இதற்கு பேரூர் செயலாளர் நாகப்பன் தலைமை தாங்கினார். தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர்.
வடமதுரை, அய்யலூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. வினர் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் மவுன ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். குஜிலியம்பாறையில் தி.மு.க. சார்பில் கண்ணாடி பெட்டியில் கருணாநிதியின் மாதிரி உருவபொம்மையை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முக்கிய வீதி வழியாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
சாணார்பட்டி ஒன்றியம், கோபால்பட்டி, வி.எஸ்.கே. குரும்பட்டி ஆகிய பகுதிகளில் தி.மு.க.வினர் 50 பேர் மொட்டை அடித்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கமாட்சிபுரம் ஊராட்சி கே.எல்லைப்பட்டியில் 5 பேரும், சில்வார்பட்டி ஊராட்சி கெத்தேனிபட்டியில் 4 பேரும் மொட்டை அடித்தனர்.
தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் பஞ்சாலைகளுக்கு வாகனங்கள் இயக்கியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கண்டித்து திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் அகரம் பிரிவு அருகே சரக்கு வாகனங்கள் மற்றும் தனியார் பஞ்சாலை வாகனங் களை மறித்து தி.மு.க. வினர் மறியல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
அதன்பின்னரே தி.மு.க. வினர் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
Related Tags :
Next Story