ஆரூரில் தோன்றி அகிலம் ஆண்ட தலைவர்


ஆரூரில் தோன்றி அகிலம் ஆண்ட தலைவர்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:32 AM IST (Updated: 9 Aug 2018 10:32 AM IST)
t-max-icont-min-icon

ஆரூரில் தோன்றி அகிலம் ஆண்ட தலைவர் கருணாநிதி என்று ஆரூர் தாஸ் கூறியுள்ளார்.

1942-ம் ஆண்டு... எனக்கு 11 வயது. அப்போது திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் நான் 6-ம் வகுப்பு படித்தேன். அதே பள்ளியில் கலைஞர் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். அவர் என்னை விட 7 வயது மூத்தவர்.

பள்ளியில் படிக்கும்போதே திராவிட மாணவர் கழக தலைவராக இருந்தார். தனது 18-வது வயதிலேயே முரசொலியைத் தொடங்கிவிட்டார். அப்போது கையெழுத்து பிரதியாக அதை வெளியிட்டார். நாகை திராவிடர் நடிகர் கழகத்துக்காக ‘சாந்தா அல்லது பழனியப்பன்’ என்ற நாடகத்தையும் அப்போதே அவர் எழுதினார்.

மாணவ பருவத்தில் அவர் முரசொலியில் எழுதியவை இன்னும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அப்போதே அண்ணா போன்று அடுக்கு சொற்களில் அழகழகாய் எழுதுவார்.

ஒருமுறை காங்கிரஸ்காரர்கள் திருவாரூரில் தமிழ் மாநாடு நடத்தினார்கள். இதை கண்டித்து கருணாநிதி நோட்டீஸ் அடித்து வினியோகம் செய்தார். அதில், ‘கசாப்பு கடைக்காரர்களின் ஜீவகாரூண்ய மாநாடு’ என கிண்டல் செய்திருந்தார்.

அவருடைய எழுத்துக்களை படித்து வியந்தேன். அவர் தான் எனக்கு உந்து சக்தியாக விளங்கினார். அவரை பார்த்துதான் நான் எழுதத்தொடங்கினேன்.

1942-ம் ஆண்டு பெரியார் திருவாரூர் வந்தார். அப்போது கருணாநிதியின் வயது 18. அவர்தான் பெரியாருக்கு வரவேற்புரை வாசித்தார். ‘திராவிடம். இந்த இனம் கெட்டு எத்தனை நாள் ஆயிற்று. அறிவும் மானமும் அடகு கடைக்கு. நாடும் ஏடும் நஞ்சேறி போயின. இன்னுமா இந்த நிலை? இப்படியொரு கேள்வி ஈரோட்டுக் கேள்வி. இன எழுச்சி கேள்வி. வேள்வி புரிந்த வேதியரும் அவர் தம் வெள்ளைக் காவலரும் தோல்வியை தொடச் செய்யும் கேள்வி. மகாத்மாக்கள் மண்டையில் முளைக்காத கேள்வி. ஆச்சார்யர்கள் கேட்காத கேள்வி. இதுதான் ஈரோட்டு பெரியாரின் கேள்வி’ என்று படித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதன் பிறகு பெரியாரிடம் சென்றார். அவர் நடத்திய விடுதலை, குடியரசு பத்திரிகைகளில் துணை ஆசிரியராக சேர்ந்தார். பிறகு, சி.எஸ்.ஜெயராமன் பரிந்துரையின் பேரில் கோவை ஜூபிட்டர் பிக்சரில் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் உதவியாளராக சேர்ந்து ராஜகுமாரி, அபிமன்யு ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதினார்.

1947-ல் ராஜகுமாரி திரைப்படம் திருவாரூர் பேபி டாக்கீசில் ரிலீஸ் ஆனது. திரையில் மு.கருணாநிதி என்ற பெயரை பார்த்தேன். முதல் ஆளாக அவருடைய பெயருக்கு கைத்தட்டியது நான்தான்.

பிறகு, எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும் நடித்த மருதநாட்டு இளவரசி படத்துக்கு கருணாநிதி வசனம் எழுதினார். அந்த ஆண்டின் மிகச்சிறந்த படமாக மருதநாட்டு இளவரசி படம் திகழ்ந்தது. சிறந்த கதை, வசன கர்த்தா என கருணாநிதி புகழப்பட்டார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆகியோரின் அறிமுகப்படங்களுக்கு வசனம் எழுதிய பெருமையை பெற்றார்.

கருணாநிதி கதை, வசனம் எழுதிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்று சொல்ல வேண்டுமானால், மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, பராசக்தி, மனோகரா மற்றும் கருணாநிதியின் சொந்த தயாரிப்பான பூம்புகார் படங்களை குறிப்பிடலாம். இந்த படங்களெல்லாம் கருணாநிதியின் கதை, வசனத்துக்காகவே ஓடின.

சிவாஜி நடித்த பராசக்தி படத்துக்காக, அவர் எழுதிய ‘வானத்தை முட்டும் மாளிகைகள்! மானத்தை இழந்த மனிதர்கள்! உயர்ந்த கோபுரங்கள்! தாழ்ந்த உள்ளங்கள்!’, ‘நான் தென்றலை தீண்டியதில்லை! தீயை தாண்டி இருக்கிறேன்!’, ‘பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ என்ற வசனங்கள் மிகவும் பிடிக்கும்.

இதே போல, மருதநாட்டு இளவரசியில் கருணாநிதி எழுதிய, ‘இந்த மண்ணிலேதான் பிறந்தேன்! இந்த மண்ணிலேதான் மழலை மொழி பேசித் தவழ்ந்து விளையாடினேன்! இந்த மண்ணிலேதான் சவமாகச் சாயப்போகிறேன். வந்தாரை வாழ வைக்கும் இந்த மண்ணில் சொந்த நாட்டுக்காரன் அநியாயமாகச் சாவதா? குற்றமற்றவன் சாவதா?’ போன்ற வசனங்களும் ரொம்ப பிடித்தவை.

சினிமாவை பொறுத்தவரை அண்ணாவுக்கு மூத்தவர் கருணாநிதி தான். அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி திரைத்துறையில் நுழைந்துவிட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் ஒரே சமயத்தில் அண்ணா ‘ஓர் இரவு’ படத்துக்கும், கருணாநிதி ‘பராசக்தி’ படத்துக்கும் தனித்தனி அறைகளில் இருந்து வசனம் எழுதினார்கள்.

கதை, இலக்கியம், அரசியல் மூன்றிலும் திறமை பெற்றவர் கருணாநிதி. இவை மூன்றும் அவருக்கு பிறவியிலேயே வந்தமைந்தவை. இதை அண்ணாவே கூறி இருக்கிறார்.

எழுத்து, பேச்சு ஆகிய இரண்டையும் வைத்து தி.மு.க. வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். காகிதப்பூ, மணிமகுடம் போன்ற நாடகங்கள், மேடைப்பேச்சு மூலமாக 1967-ம் ஆண்டு தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தார்.

அந்த தேர்தல் தோல்விக்கு பிறகு பேசிய பெருந்தலைவர் காமராஜர், ‘நம்மிடம் இப்படியொரு கருணாநிதி இருந்திருந்தால் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று இருக்கும்’ என்று குறிப்பிட்டார்.

அண்ணாவின் தலைமையிலான ஆட்சியில் 43 வயதில் அமைச்சர் பதவியை அலங்கரித்தார். பொதுப்பணித்துறை, போக்குவரத்துதுறை அவருக்கு ஒதுக்கப்பட்டன. 45-வது வயதில் முதல்-அமைச்சர் ஆனார்.

1969-ல் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், தி.மு.க. அத்துடன் தேய்ந்து போய் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்திருக்கும்.

50 ஆண்டுகளாக தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்த ஒரே தலைவர் அவர் தான். கடந்த 2 தேர்தலில் சொந்த ஊரான திருவாரூரில் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கருணாநிதியின் எழுத்துக்களை பின்பற்றி நானும் எழுத தொடங்கி, சினிமாவுக்கு வந்து இன்றைக்கு ஆயிரம் பிறைகள் கண்டு, ஆயிரம் படங்கள் வரை வசனம் எழுதக்கூடிய பெரிய பாக்கியத்தை பெற்றேன் என்றால் அந்த பெருமை அவரையே சேரும். அவர் தான் என்னுடைய முன்னோடி. எனக்கு வழிகாட்டியும், கைகாட்டியும் அவரே. நிலைத்த நீடித்த புகழுக்கு காரணம், அவருக்கு ஒரு பராசக்தி என்றால், எனக்கொரு பாசமலர்.

3 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் என்னுடைய பிறந்தநாளான ஒவ்வொரு செப்டம்பர் 10-ந்தேதியும் கருணாநிதியின் இல்லத்துக்கு சென்று அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாக வைத்திருந்தேன். நான் கேட்காமலேயே எனக்கு 3 பவுன் தங்கத்துடன் கலைமாமணி விருது வழங்கினார். 5 பவுன் தங்கத்துடன் கூடிய அண்ணா பெயரிலான கலை வித்தகர் விருதை வழங்கி என்னை கவுரவப்படுத்தினார்.

‘படங்களின் எண்ணிக்கையில் தம்பி ஆரூர்தாஸ் என்னை முந்திக்கொண்டான்’ என்று ஒரு விழாவில் சொன்னார். அப்போது ‘நான் சினிமாவில் எழுச்சி பெறாவிட்டால், உங்களிடம் வந்து இருப்பேன். என்னையும் ஒரு அமைச்சராக்கி இருப்பீர்கள்’ என்றேன். அதற்கு பதில் அளித்த கலைஞர், ‘நல்லவேளை நான் தப்பித்துக்கொண்டேன்’ என்று சொல்லி அனைவரையும் சிரிக்கவைத்தார்.

2010-ல் நடந்த என்னுடைய பேரன் திருமணத்துக்கு இடைவிடாத மழையிலும் தவறாமல் வந்து, தாத்தாவை போல நீயும் பேரும், புகழுடன் விளங்க வேண்டும் என்று சொல்லி என் பேரனுக்கு ஒரு பவுன் தங்கத்தை அன்பளிப்பாக தந்தார்.

இப்படி என்னுடனும், என்னுடைய குடும்பத்தினரோடும் ஊரும் உறவும் கொண்ட ஈடுஇணையற்ற ஒரே தலைவரை இழந்து வாடும் நாங்கள் யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது என்று தெரியாமல் தேம்பி அழுதுகொண்டு இருக்கிறோம்.

முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர் கருணாநிதியை போல ஒரு மாபெரும் தலைவர் உருவாகவோ, அல்லது உருவாக்கப்படவோ வாய்ப்பே இல்லை என்று கூறுகிறேன்.

வாழ்க அண்ணன் கலைஞரின் புகழ். தமிழ் உள்ள காலம் வரையிலும் தலைவர் கலைஞர் புகழ் நிலைத்திருக்கும். 

-கலை வித்தகர் ஆரூர் தாஸ்


Next Story