தபால்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தபால்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தபால்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான திறனாய்வு தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து தூத்துக்குடி தபால் கோட்ட தலைமை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
தூத்துக்குடி மாவட்ட தபால் அலுவலகத்தில் ரூ.300 செலுத்தி தபால் தலைசேகரிப்பு கணக்கு தொடங்கிய மாணவ-மாணவிகளுக்கு தபால் துறை சார்பில் தீனதயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்னும் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தபால் தலை சேகரிப்பு கணக்கு தொடங்கி உள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தபால்துறை சார்பில் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆகையால் தபால்தலை சேகரிப்பு கணக்கு தொடங்கி உள்ள மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கான திறனாய்வு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தபால் தலை சேகரிப்பு கணக்கு இல்லாதவர்கள், புதிதாக ரூ.300 தலைமை தபால் அலுவலகத்தில் செலுத்தி புதிய கணக்கை தொடங்கியும் உதவித்தொகைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வுக்கு வருகிற 16-ந் தேதிக்குள் மதுரை தென்மண்டலம், கோவை மேற்கு மண்டலம், சென்னை மண்டலம், திருச்சி மத்திய மண்டலம் தபால்துறை இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தபால் உறையில் தீனதயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்று எழுதப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story