வேலைவாய்ப்புகளை எளிமையாக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி!
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது.
ஏழை எளிய மாணவர்கள் அரசு வேலைகளில் எளிமையாக சேர்வதற்கு இந்த டிப்ளமோ பயிற்சிகள் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. தினந்தோறும் ஓரிரு மணி நேரத்தில் இந்த பயிற்சியை கற்றுக்கொள்ள முடியும் என்பது படிப்பதற்கு எளிமையாக இருந்தது. கணினிகளின் வரவால் இன்று தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கற்றுத்தரும் மையங்கள் குறைந்துவிட்டன. அதனால் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிக்கு தேவை அதிகரித்திருக்கிறது. எளிதில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பற்றி பார்ப்போம்...
கணினித் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மற்றும் பொறிறியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அள்ளி வழங்கிய ஊதியமும், பெரும்பாலானவர்களுக்கு இந்த துறை மீதான நாட்டத்தை குறைத்தது எனலாம். இருந்தாலும் இன்றும் அரசு அலுவலகங்களில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பணிகளின் தேவை மிகுதியாகவே உள்ளது. பல ‘கிரேடு’களில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பணியிடங்கள் அரசு துறைகளில் உள்ளன. மத்திய அரசு ஆண்டுதோறும் எஸ்.எஸ்.சி. அமைப்பின் வழியே ஸ்டெனோகிராபர் பணிகளுக்கான தேர்வு நடத்தி அரசுத்துறைகளில் உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்பி வருகிறது.
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படுகிறது.
சுருக்கெழுத்தர் பணி என்பது நிகழ்ச்சி விவரங்கள் மற்றும் பிரபலங்களின் உரைகள் போன்றவற்றை குறிப்பு எழுத்துகளில் சுருக்கமாக குறிப்பெடுத்து, அதை தேவையான மொழிகளுக்கு தட்டச்சு செய்து மாற்றுவதாகும். அரசுத்துறையில் நடக்கும் நிகழ்வுகளை, உரைகளை உடனுக்குடன் அறிக்கைகளாக்கி, செய்திகளாக்கித் தருபவர்கள் சுருக்கெழுத்தர்களே. குறிப்பு எடுப்பதுடன் தட்டச்சும் செய்ய வேண்டியிருப்பதால் இவர்கள் தட்டச்சும் பயின்றவர்களாகவே இருப்பார்கள். தட்டச்சு பயில்பவர்கள், இளநிலை, முதுநிலை என இருநிலை வேகம் கொண்டவர்களாக பயிற்சி சான்றிதழ் பெறலாம். இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் தனித்தனியே பயிற்சி சான்றிதழ் பெற முடியும்.
தட்டச்சுக்கலையை பள்ளிப் பாடம் பயிலும்போதே, மாலைநேர பயிற்சியாக படிப்பவர்கள் முன்பு அதிகம். இப்போதும் ஆர்வம் இருப்பவர்கள் சில மணி நேரங்களை ஒதுக்கி படிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சுருக்கெழுத்து கல்வி பெற தகுதியானவர்கள். பட்டதாரிகளும் படிக்கலாம். எந்தப் பாடப்பிரிவில் படித்தவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம். அரசு பணிகளில் சேரும்போது இந்த பயிற்சியில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. சில துறை பணிகளில் குறிப்பிட்ட வேகம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகிறது.
தங்களுக்கு நான்றாகப் பேச, எழுத வரும் தாய் மொழியிலேயே சுருக்கெழுத்து பயிற்சி பெறலாம். நல்ல மொழியறிவு பெற்றவர்கள், ஆங்கிலம் இந்தி போன்ற மொழிகளிலும் பயிற்சி பெற்றுக் கொண்டால், மொழி பெயர்ப்பாளர் பிரிவிலும் பணிவாய்ப்பையும், அதிகாரியாக பதவி உயர்வையும் பெற முடியும்.
குறிப்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தனியார் நிறுவனங்களிலும் பணியிடங்கள் உள்ளன.
சராசரி மாணவர்கள், வாய்ப்புகள் மிக்க இந்த துறையில் திறமைகளை வளர்த்துக் கொண்டால் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகும்!
Related Tags :
Next Story