ஹோலோபோர்டேஷன் தொழில்நுட்பமும், கல்வி முறை மாற்றங்களும்...!


ஹோலோபோர்டேஷன் தொழில்நுட்பமும், கல்வி முறை மாற்றங்களும்...!
x
தினத்தந்தி 9 Aug 2018 3:18 PM IST (Updated: 9 Aug 2018 3:18 PM IST)
t-max-icont-min-icon

ஒரு இடத்திலிருக்கும் நபரை இன்னொரு இடத்துக்கு அப்படியே வினாடி நேரத்தில் அனுப்பி வைப்பது தான் இந்த தொழில்நுட்பம்.

“அமெரிக்காவில் வேலை வேலைன்னு இருக்கிற பையனை எப்போதான் பாக்கறது?” என்பது தொலைதூரத்தில் இருக்கும் இந்தியப் பெற்றோரின் புலம்பலாய் இருக்கிறது. தினமும் காலையில் அவர்கள் அமெரிக்கப் பையனின் வீட்டு வரவேற்பறையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்தால் எப்படி இருக்கும்? அல்லது அமெரிக்க பையன் இங்கே வந்து பெற்றோருடன் டைனிங் டேபிளில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போனால் எப்படி இருக்கும்? ஒரு அறிவியல் புனைகதை போல இருக்கிறது இல்லையா?

இப்படி ஒரு விஷயம் நடந்தால் ஒன்று அது மேஜிக்காக இருக்க வேண்டும், அல்லது பேய் பிசாசாக இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள். அது ஹோலோபோர்டேஷன் நுட்பமாகவும் இருக்கலாம் என்பதுதான் வியப்பூட்டும் செய்தி.

தொழில்நுட்பம் நமக்கு முன்னால் நீட்டும் விஷயங்கள் நம்மை தினந்தோறும் வியப்புக்குள் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. புறாவின் காலில் கடிதம் கட்டி அனுப்பிய செய்தி வரலாறுகளில் உண்டு. திரும்ப அந்தப் புறா கொண்டு வரும் பதில் செய்திதான் முதல் கடிதம் சென்று சேர்ந்ததற்கான அத்தாட்சி ! அதற்கு பல மாதங்கள் ஆகும் என்பது தோராயக் கணக்கு.

அதன் பின் கடிதப் பயன்பாடுகள் வந்தன. இன்லண்ட் லெட்டரிலோ, போஸ்ட் கார்டிலோ மூச்சு முட்ட எழுத்துகளை நிரப்பி அனுப்பிய கதை கடந்த தலைமுறையினருடையது. இன்லண்ட் லெட்டரின் ஓரங்களிலும், போஸ்ட்கார்டின் விலாசப் பகுதியிலும் எழுதும் முகவரிக்கு கடிதங்கள் சென்று சேர சில நாட்கள் முதல், சில வாரங்கள் வரை தேவைப்பட்டன.

அதன் பின் மொபைல் போன் வந்தது. குறுஞ்செய்திக்கு பேஜரும், அதற்குப் பிறகு எஸ்.எம்.எஸ்.சும், மின்னஞ்சல்களும் மாபெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டன. எழுதும் வழக்கம் ஒழிந்து போக டிஜிட்டலுக்குள் நுழையும் பழக்கம் வந்தது. அதன் பின் வீடியோ உரையாடல் வந்து டைப் பண்ணுவதையும் குறைக்க ஆரம்பித்தது.

தொலைதூரத்தில் இருக்கின்ற நண்பர்களோ, உறவினர்களோ அவர்களை வீடியோவில் பார்த்துப் பேசுவது அடுத்த கட்ட வளர்ச்சியானது. என்ன தான் இது அன்னியோன்யமாக இருந்தாலும் ஒரு டிஜிட்டல் கட்டத்துக்குள் 2டி நுட்பத்தில் தானே இந்த உரையாடல் நடக்கிறது. இது அப்படியே 3டி நுட்பத்தில், நாம் பேசிக் கொண்டிருப்பவர்கள், நமக்கு முன்னால் அமர்ந்திருப்பது போன்ற நிஜ உணர்வு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் நினைத்ததன் விளைவுதான் இந்த புதுமையின் வரவு. ஒரு இடத்திலிருக்கும் நபரை இன்னொரு இடத்துக்கு அப்படியே வினாடி நேரத்தில் அனுப்பி வைப்பது தான் இந்த தொழில்நுட்பம்.

இதன் மூலம் நாகர்கோவிலில் இருக்கும் பெற்றோர், சென்னையில் இருக்கும் பிள்ளைகளை நேரடியாக பார்த்து பேச முடியும். பக்கத்தில் அமர்ந்து அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். காஷ்மீரில் இருக்கும் ஒருவரும், லண்டனில் இருக்கும் ஒருவரும் நேரடியாக பார்த்து பேசிக்கொள்ள முடியும். டெல்லியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவர் சென்னையில் இருக்கும் ஒரு தலைவரோடு பேச, விமானம் பிடிக்கத் தேவையில்லை. இந்த தொழில்நுட்பத்தைப் பிடித்தாலே போதும்.

இது சொல்கின்ற நுட்பம் எளிதானது. ஒரு அறையில் மைக்ரோசாப்ட் தயாரிப்பான 3டி கேப்சரிங் கருவிகளான கேமராக்களைப் பொருத்த வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு கேமராக்கள் தேவைப்படும். அதிகம் கேமராக்கள் இருந்தால் படம் தெளிவானதாகவும், படு யதார்த்தமாகவும் இருக்கும். அந்த காட்சிகளை கணினி தொடர்ச்சியாய்ப் பதிவு செய்து முப்பரிமாண உருவங்களாக்கி, தகவல்களை கம்ப்ரஸ் செய்து எங்கே வேண்டுமோ அங்கே அனுப்புகிறது. இவையெல்லாம் ஒரு சில வினாடிகளில் நடக்கின்றன. சராசரியாக 50 எம்.பி.பி.எஸ். இணைய வேகம் இதற்கு அவசியம். ஆகுமெண்டர் ரியாலிடி எனும் நுட்பத்தின் அடிப்படையில் இது இயங்குகிறது.

எங்கே இந்த காட்சிகள் விரிக்கப்பட வேண்டுமோ அங்கே தலையில் மாட்டும் கண்ணாடி போன்ற ஹோலோலென்ஸ் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். இங்கே 3டி கேமராவில் பிடிக்கப்படும் காட்சிகள் தொலைதூரத்தில் இருக்கும் நபர் பயன்படுத்தும் ஹோலோ லென்ஸ் வழியாக யதார்த்தம் சிதையாமல் முன்னால் வந்து நிற்கும். இந்த காட்சிகளையெல்லாம் அப்படியே பதிவு செய்யலாம் என்பதால், ஒருமுறை உரையாடிய உரையாடலை மீண்டும் நமது அறைக்குக் கொண்டு வந்து என்ன நடந்தது என்பதை மீண்டும் நேரடியாகப் பார்க்கவும் முடியும்.

நாசாவில் பணிபுரியும் ஒரு நபரை மேடையில் நூற்றுக்கணக்கான பார்வையாளருக்கு முன்னால் வரவழைத்து அவருடன் பேசி இந்த தொழில்நுட்பத்தை முதன் முதலில் விளக்கிக் காட்டினார்கள். பார்வையாளர்கள் பரவசமடைந்தார்கள். இந்தத் தொழில்நுட்பத்தை நாசாவில் பயன்படுத்தத் துவங்கியிருப்பதாகவும், இதன் மூலம் கோள்களைக் குறித்து மிக துல்லியமான தகவல்களைப் பெற முடியும் என விஞ்ஞானி தெரிவித்தார்.

ஒரு இரு பரிமாண வெளிச்சத் திரையில் இருந்த தகவல் பரிமாற்றத்தை, நமக்கு முன்னால் இயல்பாக, உயிரோட்டமாக உலவும் காட்சிகளாக மாற்றியிருக்கிறது ஹோலோபோர்ட்டேசன் தொழில்நுட்பம். வெளிநாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மக்கள் இணைந்து நடத்தும் அலுவலக கான்பரன்ஸ் விஷயங்கள் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே அறையில் நடக்கும்.

ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியும், பேசிக்கொள்ள முடியும், ‘ஏண்டா டல்லா இருக்கே’ எனக் கேட்டு அவரை ஆறுதல்படுத்த முடியும் என இது தருகின்ற சாத்தியங்கள் மிக அதிகம். தொலைவுகளை அருகாமையாக்குவது மட்டுமல்ல, தொலைவுகளே இல்லாமலாக்கும் முயற்சியே இது! வருகின்ற காட்சிகளை மினியேச்சராக மாற்றி டைனிங் டேபிளுக்கு மேல் அமரவைக்கவும் முடியும்! இவையெல்லாம் தொழில்நுட்பம் தரும் எக்ஸ்ட்ரா வசதிகள்.

அறிவியல் ஆராய்ச்சித் தளத் தில் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கப் போகிறது. புதிய செயற்கைக் கோள்களை வடிவமைப்பது முதல் வானில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன் நேரடியாகப் பேசுவது வரை இது பயன்படும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் நிலவில் கால்வைக்கலாம். நிலவின் நிலத்தை அருகில் இருந்து பார்க்கலாம்! காலால் மிதிக்கலாம் !

இந்த தொழில்நுட்பத்தின் வரவால், டைப் செய்யும் வழக்கத்தைப்போல விரைவிலேயே வீடியோ சேட்டிங் முறையும் வலுவிழந்து போகும். இதன் அடுத்த கட்டமாக, ஓடும் காரில் இந்த கேமராக்களை அமைத்து வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். காரின் பின் சீட்டில் உங்களுக்கு அருகில் உங்கள் ஆஸ்திரேலிய நண்பரை அமரவைத்து பேசிக்கொண்டே போக முடியும்! மாய உலகத்தில்! சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஒரு நிஜ சம்பவத்துக்குள், ஒரு மாயக் காட்சியை யதார்த்தம் போல நுழைக்க இந்த தொழில்நுட்பம் உதவும்! 

Next Story