ஸ்ரீவைகுண்டம் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.7 கோடி நகைகள்– பணம் தப்பின


ஸ்ரீவைகுண்டம் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.7 கோடி நகைகள்– பணம் தப்பின
x
தினத்தந்தி 10 Aug 2018 3:30 AM IST (Updated: 9 Aug 2018 4:35 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அங்கிருந்த ரூ.7 கோடி நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் தப்பின.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அங்கிருந்த ரூ.7 கோடி நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் தப்பின.

கூட்டுறவு வங்கி 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இந்த கூட்டுறவு வங்கியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து, கடன் பெற்று உள்ளனர்.

இந்த கூட்டுறவு வங்கியில் காவலாளியாக பக்கத்து ஊரான ஆலடியூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 48) உள்ளார். இவர் பகலில் கூட்டுறவு வங்கியில் உதவியாளராக வேலை செய்து விட்டு, இரவில் கூட்டுறவு வங்கியின் மொட்டை மாடியில் படுத்து தூங்குவது வழக்கம்.

அதேபோன்று நேற்று முன்தினம் இரவில் அவர் கூட்டுறவு வங்கியின் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார். பின்னர் அவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

கொள்ளை முயற்சி 


இதற்கிடையே நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கூட்டுறவு வங்கியின் பக்கவாட்டு ஜன்னலை கடப்பாரை கம்பியால் உடைக்க முயன்றனர். ஆனால் அதனை உடைக்க முடியவில்லை. பின்னர் கூட்டுறவு வங்கியின் முன்பக்க இரும்பு கம்பி கதவின் பூட்டை உடைத்து திறந்தனர். தொடர்ந்து அங்குள்ள இரும்பு ‌ஷட்டர் கதவில் உள்ள 2 பூட்டுகளையும் உடைத்து திறந்து, வங்கிக்குள் நுழைந்தனர்.

பின்னர் அங்கு நகைகள், பணம் வைக்கப்பட்டு இருந்த இரும்பு லாக்கரை அவர்கள் உடைத்து திறக்க முயன்றனர். ஆனால் அதனை திறக்க முடியவில்லை. இதனால் அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி சென்றனர்.

போலீசார் விசாரணை 

நேற்று காலையில் வங்கியின் முன்பு துப்புரவு பணி செய்வதற்காக பெண் ஊழியர் வந்தார். அப்போது அவர், வங்கியின் முன்பக்க கதவுகளில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கணபதிக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ரூ.7 கோடி நகைகள் தப்பின 

கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு வங்கியில் பதிவான கைரேகை தடயங்களை கைரேகை நிபுணர் ராமர் பதிவு செய்தார். போலீஸ் மோப்ப நாய் ‘ஜியா’ வரவழைக்கப்பட்டது. அது கூட்டுறவு வங்கியில் மோப்பம் பிடித்து விட்டு, அங்குள்ள பஸ் நிறுத்தம் வரை ஓடிச் சென்றது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு வங்கியில் ரூ.7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் அடமானம் வைக்கப்பட்டு உள்ளதாகவும், ரூ.3 லட்சம் இருந்ததாகவும் வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால், அவைகள் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பின. கூட்டுறவு வங்கியில் மண்டல இணை பதிவாளர் அருள் அரசு மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

பரபரப்பு 

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள், அடமானம் வைக்கப்பட்ட தங்களது நகைகள் பத்திரமாக உள்ளதா? என்பதை அறிவதற்காக, காலையில் கூட்டுறவு வங்கிக்கு திரண்டு வந்தனர். தங்களது நகைகள் கொள்ளை போகவில்லை என்பதை அறிந்து உறுதி செய்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story