மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவு செய்தல் பயிற்சி மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்
நெல்லையில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
நெல்லை,
நெல்லையில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
பயிற்சி வகுப்புநெல்லை மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேடு பதிவு செய்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நெல்லை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 270 மக்கள்தொகை கணக்கெடுப்பு பகுதிகளும், 3 ஆயிரத்து 109 கணக்கெடுப்பாளர்களால் (ஆசிரியர்கள்) கணக்கெடுக்கப்பட்டு, 8 ஆயிரத்து 116 பதிவேடுகள் தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் உள்ள 4 உதவி ஆணையாளர்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளன.
கணினியில் பதிவுஇந்த பதிவேடுகளில் விவரங்கள் சேகரித்த கணக்கெடுப்பாளர்களுக்கு மதிப்பூதியம் ரூ.93 லட்சத்து 1 ஆயிரத்து 500 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. பதிவேடுகளில் உள்ள ஆதார் எண்கள், மொபைல் எண்கள் மற்றும் ரேஷன்கார்டு எண்கள் ஆகிய விவரங்களை கணினியில் பதிவு செய்தவற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
கணினியில் பதிவு செய்யும் பணியை செய்ய கணினி குறித்து தெரிந்த உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் என 44 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கணினி பதிவாளர்கள் மொத்தம் 219 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
அக்டோபர் 31–ந்தேதிக்குள்...மேற்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் 5 கணினி பதிவாளர்களை மேற்பார்வை செய்து, பணிகள் செம்மையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். பதிவேடுகளை கணினியில் பதிவு செய்த பின்னர் மேற்பார்வையாளரும், கணினி பதிவாளரும் கையெழுத்திட வேண்டும். தாசில்தார்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் பதிவேடுகளை முறையாக வழங்கி பதிவு செய்த பின்னர், திரும்ப பெற்று பாதுகாப்பாக வைக்க வேண்டும். அனைத்து பதிவேடுகளையும் வருகிற அக்டோபர் மாதம் 31–ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிற்சி வகுப்பில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ்குமார் (பொது), மகேஸ்வரன் (தேர்தல்), தேர்தல் தாசில்தார் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.