15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 12 ஆண்டு சிறை


15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 12 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 10 Aug 2018 3:00 AM IST (Updated: 9 Aug 2018 10:24 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சித்தப்பாவுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

கடலூர், 

விருத்தாசலம் தாலுகா கோ.ஆதனூர் வடக்கு காலனியை சேர்ந்தவர் அருள் என்கிற தன்ராஜ் (வயது 43) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தன்ராஜ் தனக்கு மகள் உறவு முறையான 15 வயது சிறுமியை கட்டிட வேலைக்கு அழைத்து சென்றார். இதனால் அந்த சிறுமியிடம் தனிமையில் பேசி பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. கடந்த 20–5–2016 அன்று இரவு சிறுமியை கோ.ஆதனூரில் உள்ள கரும்புதோட்டத்துக்கு வரவழைத்த தன்ராஜ், சிறுமியின் வாயில் துணியை வைத்து அமுக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் இதுபற்றி யாரிடமாவது கூறினால், உன் தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்துபோன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை.

தாய் இல்லாத அந்த சிறுமி, தனது தந்தையின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தாள். அவருக்கு துணையாக இருந்த அக்காவும், திருமணம் ஆகி வெளியூர் சென்றுவிட்டார். தந்தையும் வேலை சம்பந்தமாக அவ்வப்போது வெளியூர் சென்று விடுவதால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தாள்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தன்ராஜ், உறவு முறையில் தனது மகள் என்று கூட பாராமல் அந்த சிறுமியை வீட்டில் வைத்தும், கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்றும், வேலைக்கு செல்லும் இடங்களிலும் என கடந்த ஒரு ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் தன்ராஜின் காமப்பசிக்கு இரையான சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் தனக்கு அவமானம் ஆகி விடும் என்பதை அறிந்த தன்ராஜ், கருவை கலைக்க முடிவு செய்தார். அதன்படி தனது வயிற்றில் சிசு வளர்வது பற்றி அறியாத, சிறுமிக்கு மாத்திரைகள் வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்தார்.

இதற்கிடையே சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அறிந்த அவளது தந்தை சிறுமியிடம் விசாரித்தார். ஆனால் தன்ராஜின் மிரட்டலுக்கு பயந்து, அவரிடம் எதையும் கூறாமல் மறைத்தாள். பின்னர் அவளது அக்கா வந்து விசாரித்தபோது, சித்தப்பா தன்ராஜ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை கூறி கதறி அழுதாள்.

இதுகுறித்து கடந்த 21–3–2017 அன்று பாதிக்கப்பட்ட சிறுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமுகன் தன்ராஜை சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, அவர் மீது கடலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட தன்ராஜிக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி லிங்கேஸ்வரன் கூறினார்.

இதையடுத்து தன்ராஜ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜர் ஆனார்.


Next Story