அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி


அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி
x
தினத்தந்தி 10 Aug 2018 3:00 AM IST (Updated: 9 Aug 2018 11:32 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ரோஜா பூங்கா செல்லும் சாலையில் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மாற்று வழியில் சென்றனர்.

ஊட்டி, 



நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் தொடக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் மழை விட்டு, விட்டு பெய்தது. பின்னர் பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி- குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தின.

வீடுகள் மீது மரங்கள் விழுந்ததால், அவை சேதமடைந்தன. மேலும் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் மரம் முறிந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார். இதையடுத்து பொதுமக்கள் குடியிருப்புகள் மற்றும் சாலைகள் ஓரம் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் படி, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான மரங்களை வருவாய்த்துறையினர் கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஊட்டி ரோஜா பூங்கா பகுதியில் அபாயகரமான 6 மரங்களை வருவாய்த்துறையினர் கணக்கு எடுத்தனர். பலவண்ண ரோஜா மலர்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் ரோஜா பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பூங்காவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சீசன் காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நேரங்களில் திரளானோர் வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் கணக்கு எடுக்கப்பட்ட அபாயகரமான 6 மரங்களை வெட்ட வருவாய்த்துறையினர் அனுமதி அளித்தனர்.

அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் அந்த 6 மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி எட்டின்ஸ் சாலையில் இருந்து ரோஜா பூங்கா செல்லும் சாலையோரத்தில் உள்ள அபாயகரமான நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் முதலில் வெட்டப்பட்டு, பின்னர் அவை முழுமையாக வெட்டி அகற்றப்பட உள்ளது.

அரிவாள், மின்வாள் மூலம் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக அந்த வழியாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. வாகனங்கள் ஏதேனும் வராமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் ஏ.டி.சி. மேல்பகுதியில் உள்ள பாம்பேகேசில் வழியாக மாற்றுவழியில் ரோஜா பூங்காவுக்கு சென்றனர். 

Next Story