மாவட்ட செய்திகள்

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை + "||" + On sand smugglers Action in the thug detention act

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொசஸ்தலை ஆறு, ஆரணிஆறு போன்றவற்றை தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினர் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலம் ஏரிகரைகளை பலப்படுத்துதல் மதகுகள், வரத்து கால்வாய்கள் போன்றவற்றை சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அதன்படி கொசஸ்தலை ஆற்றில் 38 ஏரிகளும் ஆரணி ஆற்றில் 28 ஏரிகளும் தேர்வு செய்யப்பட்டு ஏரி நீர் பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பினர் இணைந்து குடிமராமத்து பணிகளை செய்து வருகின்றனர்.


இதனை தொடர்்ந்து குடிமராமத்து பணிகள் நடந்து வரும் இடங்களில் ஏரிகளில் தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றி ஏரியை ஆழப்படுத்த வேண்டும், கரைகள், மதகுகள் போன்றவற்றை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் குடிமராமத்து பணிகள் நடந்து வரும் ஏரிகளை திடீரென கலெக்டர் சுந்தரவல்லி ஆய்வு செய்தார்.

நேற்று பொன்னேரியை அடுத்த மெதூர் ஊராட்சியில் உள்ள விடதண்டலம் ஏரியை ஆய்வு செய்த பொது 80 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் 30 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த ஏரி ஆக்கிரமிப்புகளை 2 நாட்களில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் கலெக்டர் சுந்தரவல்லி கூறியதாவது:-

பொன்னேரி பகுதியில் உள்ள 9 ஏரிகளில் 6 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இந்த ஆக்கிரமிப்புகளை 10 நாட்ளுக்குள் அகற்ற பொதுப் பணித்துறை நீர்வள ஆதாரத்துறை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிந்து மழை காலத்தில் மழைநீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தனியார் நிலம் மற்றும் அரசு நிலங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தல் சம்பந்தமாக 1077 என்ற எண்ணில் புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணி நீர்வள ஆதார அமைப்பினர் உதவிசெயற்பொறியாளர் முருகன், பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, உதவிபொறியாளர் ஜெயகுரு, தாசில்தார் கார்த்திகேயன், மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு, வேளாண்மை உதவிஇயக்குனர் அபுபக்கர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் விடதண்டலம் கிராமத்தில் நடந்து வரும் தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட பணிகளை பார்வையிட்டார். இதனையடுத்து 9 ஏரிகளில் நடந்து வரும் குடிமராமரத்து பணிகளை நேரில் சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.