சொகுசு பஸ்-லாரி மோதியதில் கேரள மதபோதகர் மனைவி, மகன் உள்பட 4 பேர் சாவு


சொகுசு பஸ்-லாரி மோதியதில் கேரள மதபோதகர் மனைவி, மகன் உள்பட 4 பேர் சாவு
x
தினத்தந்தி 9 Aug 2018 11:00 PM GMT (Updated: 9 Aug 2018 6:55 PM GMT)

குமாரபாளையம் அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் கேரள மதபோதகர் மனைவி, மகன் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாமக்கல்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஒரு தனியார் சொகுசு பஸ் புறப்பட்டு கேரள மாநிலம் அடூர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. கேரள மாநிலத்தை சேர்ந்த இந்த பஸ்சை சேலத்தை சேர்ந்த டிரைவர் ரவிச்சந்திரன் (வயது 57) என்பவர் ஓட்டிச்சென்றார்.

நேற்று அதிகாலை 4.45 மணியளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் கல்லூரி அருகே இந்த சொகுசு பஸ் வந்துக்கொண்டிருந்தது. அப்போது முன்னால் கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து கோவை நோக்கி சவுக்குமர பாரம் ஏற்றிச்சென்ற லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராத விதமாக பஸ் மோதியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து சவுக்குமர கம்புகள் சரிந்து சாலையில் உருண்டோடியது. அதேபோல சொகுசு பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சிதறியது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பத்தினம்திட்டா மாவட்டம் மங்கரம் பகுதியில் கிறிஸ்தவ சபையில் மதபோதகராக உள்ள மாத்யூ என்பவருடைய மனைவி மினிவர்க்கீஸ் (37), இவர்களது மகன் ஹாசல் லிஜோ (10), பஸ் கிளனர் சித்தார்த் (38) ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் விபத்தில் மினிவர்க்கீஸின் கணவர் மாத்யூ மற்றும் கேரளாவை சேர்ந்த அருண் (29), கேஷியல் (26), ஷானு (38), லிஜோ (25), ஷியாம் (30), பிலோமினா (54), பாபு புருசோத்தம், ஷோபல் (38), ஜார்ஜ் (55) மற்றும் பஸ்சின் டிரைவர் உள்பட மொத்தம் 11 பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 2 பேர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜார்ஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். அவர்கள் விபத்தில் பலியான மினிவர்க்கீஸ், அவரது மகன் ஹாசல் லிஜோ, கிளனர் சித்தார்த் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story