6,845 ஹெக்டேர் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு


6,845 ஹெக்டேர் சொட்டுநீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 10 Aug 2018 3:30 AM IST (Updated: 10 Aug 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 845 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி, 


இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பாசன நீரை சேமிக்க உதவும் சொட்டுநீர் பாசன திட்டம் தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் செலுத்த வேண்டிய சொட்டுநீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் வேளாண்மை துறையின் சார்பில் 3 ஆயிரத்து 95 ஹெக்டேர் பரப்பளவுக்கு ரூ.20 கோடியே 5 லட்சமும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 ஆயிரத்து 750 ஹெக்டேர் பரப்பளவுக்கு ரூ.30 கோடியே 10 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரத்து 845 ஹெக்டேருக்கு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்க பயிர் வாரியாக (ஒரு ஹெக்டேருக்கு) வழங்கப்படும் மானியம் விவரம் வருமாறு:

சிறு, குறு விவசாயிகளுக்கான திட்டத்தில் வாழைக்கு ரூ.81 ஆயிரத்து 135, கரும்புக்கு ரூ.97 ஆயிரத்து 134, காய்கறி பயிர்களுக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 133, தென்னைக்கு ரூ.27 ஆயிரத்து 770 மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு வாழைக்கு ரூ.63 ஆயிரத்து 25, கரும்புக்கு ரூ.75 ஆயிரத்து 452, காய்கறி பயிர்களுக்கு ரூ.87 ஆயிரத்து 880, தென்னைக்கு ரூ.21 ஆயிரத்து 572 மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், மாற்றத்தக்க தெளிப்பான் கருவிகள் வாங்கிட சிறு,குறு விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரத்து 866 மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 208 மானியமும், மழைத்தூவான் கருவிகள் வாங்கிட சிறு,குறு விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரத்து 498 மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.23 ஆயிரத்து 690 மானியமும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு,குறு விவசாயிகளுக்கான சான்று ஆகியவற்றுடன் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்கள் பெயர், விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே இந்த திட்டத்தை விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story