ரவுடி கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ரவுடி கொலை வழக்கில்  4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 9 Aug 2018 9:45 PM GMT (Updated: 9 Aug 2018 8:11 PM GMT)

பழனியில் ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல், 



பழனி பாரதிநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). ரவுடி. இவருக்கும், பழனி அருகே உள்ள குரும்பப்பட்டியை சேர்ந்த கோபிநாத் துர்கா (34) என்பவருக்கும், மதுபான பாரில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோபிநாத் துர்கா, அவருடைய தம்பி பூபாலனிடம் (29) தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் பழனியில் வைத்து பூபாலன், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து செந்தில்குமாரை வெட்டி கொலை செய்தார்.

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அப்போது, பூபாலன் அருகில் இருந்த கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்து 500-ஐ பறித்து சென்றார். இந்த கொலை மற்றும் பணம் பறிப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பூபாலன், பழனி வி.கே.மில்ஸ் பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டி, அடிவாரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், கோபிநாத் துர்கா ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து இவர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பூபாலன் மீது பழனி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கும்படி, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார். அதன்படி பூபாலன், கோபிநாத் துர்கா உள்பட 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story