கிணற்றுக்குள் 3 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தது
திருப்பூரில் கிணற்றில் 3 வீடுகள் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் கே.வி.ஆர்.நகர் கே.ஆர்.ஆர். தோட்டம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் அருகில் அதே பகுதியை சேர்ந்த வாசிமலை(வயது 56) என்பவரின் நிலம் உள்ளது. அதில் அவர் சிறிய அளவிலான வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி பொதுகிணற்றின் சுற்றுச்சுவருடன் சேர்த்து, அறைகளின் பின்பக்க சுவர் அமைந்துள்ள வகையில் அறைகளையும் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வீடுகளில் தங்கியிருந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென கிணற்றின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த 3 வீடுகள் பயங்கர சத்தத்துடன் இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கிணற்றுக்குள் இடிந்து விழுந்த வீடுகளில் ஒரு அறையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அன்சாரி என்பவர் தங்கி இருந்து திருப்பூரில் வியாபாரம் செய்து வந்ததும், இவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் வீடுகளில் யாரும் தற்போது இல்லை என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், ஏராளமான பொதுமக்களும் அங்கு கூடினார்கள். பின்னர் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடுகளை கட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story