கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர் வேலூர் அ.தி.மு.க. நிர்வாகி
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த முயன்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர் அடையாளம் தெரிந்தது. அவர் வேலூரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ஆவார்.
வேலூர்,
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி மாலை உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று முன்தினம் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.
கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் பல்வேறு மாநில முதல்-அமைச்சர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தனிவழியில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
அதேபோன்று பொதுமக்களும் தனிவழியாக சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் உடலை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் சில இடங்களில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்துவிட்டு முன்னேறி சென்றனர்.
முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் பொதுமக்கள் நுழைந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 4 பேர் பலியானார்கள். 22 பேர் படுகாயம் அடைந்தனர். 60 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் அடையாளம் தெரியாமல் இருந்தது. அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அவரது புகைப்படம் ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று வெளியானது. அதனை பார்த்து அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மோகன் (வயது 65) ஆகும். இவர், அதே பகுதியில் துணிகளை இஸ்திரி செய்யும் கடை வைத்துள்ளார். வேலூர் கஸ்பா பகுதி அ.தி.மு.க. துணை செயலாளராகவும் இருந்தார். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு பாலாஜி என்ற மகனும், இந்துமதி என்ற மகளும் உள்ளனர்.
மோகன், அண்ணா காலத்தில் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து சென்று அ.தி.மு.க.வை தொடங்கியதும் அவர் அதில் சேர்ந்தார். கருணாநிதி இறந்த தகவல் கேட்டு நேற்று முன்தினம் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு புறப்பட்டார்.
அப்போது அவரது மனைவி பார்வதி அஞ்சலி செலுத்த செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு அவர், திராவிட தலைவர்களின் கடைசி தலைவர் இறந்துவிட்டார். அவரை கட்டாயம் பார்த்து நேரில் அஞ்சலி செலுத்தியே ஆக வேண்டும் என்று கூறி 500 ரூபாய் வாங்கிக்கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
பஸ்கள் ஓடாததால், வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு செல்லும் பயணிகள் ரெயிலில் சென்றுள்ளார். பின்னர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி ஹால் பகுதிக்கு சென்ற அவர் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மோகன் குடும்பத்தினர் அவரின் உடலை பெற்றுவர நேற்று காலை 10 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேலூர் அ.தி.மு.க.நிர்வாகி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story