கருணாநிதி மரணம்: தி.மு.க.வினர் 15 பேர் அதிர்ச்சியில் சாவு


கருணாநிதி மரணம்: தி.மு.க.வினர் 15 பேர் அதிர்ச்சியில் சாவு
x
தினத்தந்தி 9 Aug 2018 11:00 PM GMT (Updated: 9 Aug 2018 8:46 PM GMT)

கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை கேட்டு தி.மு.க.வினர் 15 பேர் அதிர்ச்சியில் இறந்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் கணபதி (வயது 87). நெசவுத் தொழிலாளி. இவர் ராசிபுரம் வட்ட தி.மு.க. துணை செயலாளர், வெண்ணந்தூர் ஒன்றிய அவைத்தலைவர், அலவாய்பட்டி கிளை செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்தவர் ஆவார்.

இவர் கடந்த சில நாட்களாக தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்த தகவல்களை தொலைக்காட்சியில் பார்த்து, ஆழ்ந்த வருத்தத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கருணாநிதியின் உடல் அடக்கத்தை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். அவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இதேபோல் ராசிபுரம் ஒன்றியம் மலையாம்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பெருமாயி அம்மாள் (53). விவசாய தொழிலாளி. தி.மு.க. தொண்டர். நேற்று முன்தினம் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பெருமாயி அம்மாள் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பரமத்தி அருகே கீரம்பூர் பக்கத்தில் உள்ள ஆண்டிப்பட்டிபுதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (75). தி.மு.க. தொண்டர். இவர் கருணாநிதி இறந்த துக்கம் தாளாமல் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் ஏற்கனவே 3 பேர் இறந்தனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். எடப்பாடி ஒன்றியம் சித்தூர் சந்தைபேட்டையை சேர்ந்தவர் துரைசாமி (50) தி.மு.க. தொண்டர். நேற்றுமுன்தினம் இரவு கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது துரைசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் ஊராட்சி கீரைக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (45). தி.மு.க. உறுப்பினரான இவர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவியும் 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மெய் என்கிற மெய்யழகன்(52), தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மரணம் அடைந்ததை அறிந்ததில் இருந்து அதிர்ச்சியில் இருந்தார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவர், பாப்பம்பட்டி 5-வது வார்டு தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது கருணாநிதியின் உடல் ஊர்வலமாக கொண்டுவரப்படுவதை பார்த்த அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

இதேபோல, வடமதுரை 11-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (55). இவர் தி.மு.க.வின் வடமதுரை பூத் கமிட்டி உறுப்பினராக இருந்தார். நேற்று முன்தினம் மாலை கருணாநிதியின் இறுதி ஊர்வல நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்ப்பட்டி ஆசிரமத்தை சேர்ந்த பழனிக்குமார் மனைவி முனியம்மாள் (45). இவர், கருணாநிதி மறைவையொட்டி தெருவில் நடந்த ஒப்பாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, மிகுந்த கவலையடைந்த முனியம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். வத்தலக்குண்டு சின்னுபட்டியைச் சேர்ந்தவர் வாசுதுரை (51). தி.மு.க தொண்டரான இவர், கருணாநிதி மறைவினால் மன உளைச்சல் ஏற்பட்டு புலம்பியவாறு இருந்தார். நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் வீட்டிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையை சேர்ந்தவர் கங்காதரம் (67). தையல் தொழிலாளி. தி.மு.க. தொண்டர். தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், மனவேதனைக்கு ஆளானார். டி.வி.யில் கருணாநிதி இறுதி ஊர்வலத்தை பார்த்த அவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். திருவள்ளூரை அடுத்த புட்லூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த தி.மு.க. தொண்டரான இந்திரன் (55) கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

பொன்னேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலன் என்கிற மீசை (65). தி.மு.க. தொண்டரான இவர், நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவர் அதிர்ச்சியில் நாற்காலியில் அமர்ந்தவாறே இறந்து விட்டார்.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் 2-வது வார்டு கஸ்தூரிபாய் நகர் ரோட்டில் வசிப்பவர் பன்னீர்செல்வம் பிள்ளை(75). தி.மு.க. நகர முன்னாள் துணை செயலாளரான இவர் நேற்று முன்தினம் மாலை கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் பிள்ளை, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (52). தொழிலாளி. தற்போது செல்வராஜ் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஓட்டப்பாறை திருநகரில் வசித்து வந்தார். மேலும் அவர் தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்தபடி செல்வராஜ் அழுது உள்ளார். அப்போது திடீரென செல்வராஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். 

Next Story